Published : 22 Apr 2020 05:56 PM
Last Updated : 22 Apr 2020 05:56 PM
உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான ஸ்கூபி டூவை வைத்து, வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பாக உருவாகியிருக்கும் ஸ்கூப் அனிமேஷன் திரைப்படம் நேரடியாக டிஜிட்டலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று நெருக்கடி காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் சமூக விலகல், ஊரடங்கு உத்தரவுகள் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளைப் பாதித்துள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரைத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும், திறந்தாலும் மக்கள் மீண்டும் கூட்டமாக வருவார்களா என்பது பற்றி சந்தேகங்கள் நிலவுகின்றன.
இந்நிலையில் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகள் தள்ளிப்போயுள்ளன. சில படங்களை நேரடியாக டிஜிட்டலில் வெளியிட அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அப்படி 'ஸ்கூப்' திரைப்படத்தையும் திரையரங்கில் வெளியிடாமல் டிஜிட்டலாக வெளியிட வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
படம் மே 15 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே அதே தேதி முதல், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில், 24.99 டாலர்கள் கொடுத்து இந்தப் படத்தை டிஜிட்டலில் வாங்கிக் கொள்ளலாம் என்று வெரைட்டி பத்திரிகை செய்தி கூறியுள்ளது. அல்லது 19.99 டாலர்களுக்கு வாடகை எடுத்தும் பார்க்கலாம்.
"நாங்கள் அனைவரும் மீண்டும் எங்கள் படங்களைத் திரையரங்கில் திரையிட்டுக் காட்ட ஆர்வத்துடன் இருக்கிறோம். ஆனால் தற்போது நாம், இதுவரை பார்க்காத ஒரு சூழலில் வாழ்கிறோம். இந்த நேரத்தில் எங்கள் படத்தை எப்படி விநியோகிக்கவுள்ளோம் என்பதில் புதிய சிந்தனையும், சூழலுக்குத் தகுந்தமாதிரி மாறுவதும் அவசியமாகிறது.
'ஸ்கூப்' படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியும். குடும்பத்துக்கான இந்த மகிழ்ச்சியான படத்தை, குடும்பங்கள் அவர்கள் வீட்டிலேயே சேர்ந்து பார்க்கும்படி எங்களால் வெளியிட முடிகிறது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி" என்று வார்னர் ப்ரதர்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, யூனிவர்ஸல் நிறுவனத்தின் 'ட்ரால்ஸ் வேர்ல்ட் டூர்' என்ற அனிமேஷன் திரைப்படமும், திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. வெளியான முதல் வார இறுதியிலேயே டிஜிட்டலில், வாடகையில் பார்க்க வெளியிடப்பட்ட திரைப்படங்களிலேயே அதிக வசூல் என்ற சாதனையைப் படைத்தது. இதுதான் வார்னர் ப்ரதர்ஸுக்கும் நம்பிக்கை கொடுத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT