Published : 03 Apr 2020 11:30 AM
Last Updated : 03 Apr 2020 11:30 AM
நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவிலும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதுவரை அந்த நாட்டில் 2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலுக்கு அஞ்சி அமெரிக்காவில் உள்ள 33 கோடி அமெரிக்கர்களில் 30 கோடி அமெரிக்க மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளினியும், நடிகையுமான ஓப்ரா வின்ஃப்ரே கரோனா நிவாரண நிதியாக 10 மில்லியன் டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓப்ரா வின்ஃப்ரே கூறியிருப்பதாவது:
''நாடு முழுவதும் உள்ள நான் வளர்ந்த நகரங்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் இந்த நெருக்கடியான சூழலில் உதவ 10 மில்லியன் டாலர்களை வழங்குகிறேன். சிறுவயதில் நான் என் தாயிடம் வளர்ந்தபோது பொருளாதார நெருக்கடியில் நாங்கள் இருந்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. சில நேரங்களில் நம் குடும்பங்கள் பிழைக்க ஏதோ ஒரு உதவி தேவைப்படுகிறது. இதுபோன்ற தருணங்களில் ஏராளமான மக்கள் பாதிப்படையக் கூடியவர்களாக இருக்கிறார்கள்''.
இவ்வாறு ஓப்ரா வின்ஃப்ரே கூறியுள்ளார்.
நேற்று (02.04.2020) பிரபல ஹாலிவுட் நடிகரும் கலிஃபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வாஸ்னேகர், கோவிட்-19 பாதிப்பு நிவாரணமாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT