Published : 20 Mar 2020 09:58 AM
Last Updated : 20 Mar 2020 09:58 AM

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைப்பு

பிரான்ஸில் ஆண்டுதோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா, கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. உலகம் முழுவதும் வைரஸால் இதுவரை 2.19 லட்சம் பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,000 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

உலகம் முழுக்க பலவேறு முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகமே பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதனுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் எங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கேன்ஸ் திரைப்பட விழாவை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் சாத்தியக் கூறுகளை மதிப்பீடு செய்து, பிரான்ஸ் அரசாங்கம், திரைப்பட விழா உயர்மட்ட நிர்வாகிகள், திரையுலக நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து எங்கள் முடிவை தெரியப்படுத்துவோம். அதே நேரத்தில் பிரான்ஸ் அதிபரின் முழு அடைப்பு உத்தரவை அனைவரும் மதித்து இது போன்ற இக்கட்டான சூழலில் ஒட்டுமொத்த உலகத்தோடும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கேன்ஸ் திரைப்பட விழா ஜூன் மாத இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x