Published : 14 Aug 2015 11:13 AM
Last Updated : 14 Aug 2015 11:13 AM
அமெரிக்கத் திகில் படமான ‘ரிடர்ன் டு சென்டர்’ இங்கிலாந்தில் மே மாதமே வெளியாகிவிட்டது. அமெரிக்காவில் வரும் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக இருக்கிறது.
ஒரு சிறு நகரத்தில் மிராண்டா வெல்ஸ் நர்ஸாகப் பணியாற்றிவருகிறார். இயல்பான வாழ்க்கை நடத்திவரும் அவருக்குத் தோழி ஒருவரின் தூண்டுதல் மூலமாக விநோதமான ஆசை ஒன்று வருகிறது. அறிமுகமற்ற ஒருவருடன் டேட்டிங் போக வேண்டும் என முடிவுசெய்கிறார். கெவின் என்னும் நபரையும் சந்திக்க முடிவுசெய்து டேட்டிங்குக்கு வரச் சொல்கிறார்.
டேட்டிங் நாளன்று மிராண்டா கிளம்பிக்கொண்டிருக்கிறார். அப்போது வெளியே சத்தம் கேட்கிறது. சென்று பார்க்கிறார். ஒரு நபர் நிற்கிறார். அவர் தான் கெவின் என நினைத்து உள்ளே அழைத்து வருகிறார். ஆனால் வந்தவரின் நடவடிக்கைகள் விநோதமாக இருக்கின்றன. அவரைத் தவிர்க்கும் முன்னர் அந்த நபரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார் மிராண்டா. பின்னர் அந்த நபர் ஓடி ஒளிந்துவிடுகிறார்.
இப்போது வேறொருவர் வருகிறார். அவர்தான் கெவின். மிராண்டா டேட்டிங்குக்கு ஒப்புதல் தந்த நபர் என்பது புரிகிறது. முதலில் வந்த வில்லியம் ஃபின் என்பவரை போலீஸ் கைது செய்து சிறையிலடைக்கிறது. இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப மிராண்டா முயல்கிறார். இதனிடையே சிறையில் இருக்கும் வில்லியமுக்கு மிராண்டா கடிதம் எழுதுகிறார். ஒவ்வொரு முறையும் கடிதம் திரும்பி வருகிறது. விடாமல் கடிதத்தைத் தொடர்ந்து அனுப்புகிறார் மிராண்டா. இறுதியில் வில்லியம், மிராண்டா இருவருக்குமிடையே நட்பு உருவாகிறது.
சிறையிலிருந்து வெளியே வரும் வில்லியம் அடிக்கடி மிராண்டாவின் வீட்டுக்கு வருகிறார். இருவருக்குமிடையே விளையாட்டுக் காதல்கூட ஏற்படுகிறது. வீட்டுக்கு வரும் வில்லியமை வீட்டுக்குள் மிராண்டா அனுமதிப்பதில்லை. ஒரு நாள் அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது பார்வையாளர்களை அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அது என்ன என்பதே படத்தின் சுவாரஸ்யமான திருப்பம்.
கான் கேர்ள் படத்தில் அசத்திய ரோஸமண்ட் பைக் மிராண்டாவாக நடித்துள்ளார். ஹல்க், ஹோட்டல் ருவாண்டா போன்ற படங்களால் அறியப்பட்டிருக்கும் நிக் நால்டே மிராண்டாவின் தந்தையாகவும் வில்லியமாக ஷைலோ ஃபெர்னாண்டஸும் நடித்திருக்கிறார்கள். உணர்வும் திகிலும் அலைமோதும் படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கானது இந்தப் படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT