Published : 10 Feb 2020 03:28 PM
Last Updated : 10 Feb 2020 03:28 PM

நிற அரசியல், ஆண்-பெண் சமத்துவம், கிண்டல்கள்: ஆஸ்கர் 2020 சுவாரசிய தருணங்கள்

92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் ரசிகர்களை சுவாரசியப்படுத்திய முக்கியத் தருணங்கள் பற்றிய தொகுப்பு இதோ...

> இந்த வருட ஆஸ்கர் பரிந்துரையில் பெண் இயக்குநர்கள் யாரும் பரிந்துரைக்கப்படாமல் இருந்ததும், ஒரே ஒரு கருப்பின நடிகர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டிருந்ததும் ஏற்கனவே விமர்சனத்துக்குள்ளானது. இதை மீண்டும் சுட்டிக் காடும் விதமாக, நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் க்றிஸ் ராக் மற்றும் ஸ்டீவ் மார்டின், இது குறித்து நையாண்டி செய்தனர். 1929ல் ஆஸ்கர் ஆரம்பித்த போது அதில் கருப்பின நடிகர்கள் யாருமே பரிந்துரையில் இல்லை என்றும், 2020ல் ஒருவர் இடம்பெற்றிருப்பது அற்புதமான வளர்ச்சி என்றும் ஸ்டீவ் மார்டின் நக்கலாகக் குறிப்பிட்டது பெரும் வரவேற்பைப் பெற்றது.

> பிராட் பிட், வாக்கின் ஃபீனிக்ஸ், அமெரிக்கன் ஃபேக்டரி ஆவணப் பட இயக்குநர்கள் என பல கலைஞர்கள் ஆஸ்கர் மேடையில் அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதில் சிலவற்றுக்கு ஆதரவும், சிலவற்றுக்கு அதிருப்தி குரல்களும் எழுந்துள்ளன.

> சிறந்த இசைக்கான விருதை அறிவிக்க, ப்ரீ லார்சன், சிகோர்னி வீவர், கால் கடாட் என மூவரும் மேடையில் தோன்றினர். தாங்கள் மூவரும் இணைந்து சண்டை போடுவதற்கான சங்கத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதில் ஆண்களுக்கும் இடமுண்டு ஆனால் அவர்கள் சட்டை அணியக் கூடாதென்றும் நகைச்சுவையாக அறிவித்தனர். மேலும் இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வாசனை திரவியம், சூஷி உணவு, டெகிலா பானம் இலவசம், தோற்பவர்கள், 'ஹாலிவுட்டில் ஒரு பெண் எப்படி உணர்கிறார்' என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் நையாண்டி செய்ய, அங்கிருந்து பெண் கலைஞர்கள் அனைவரும் இதற்கு ஆரவாரம் செய்தனர்.

> சிறந்த இசைக்கான விருதை வென்ற ஜோக்கர் பட இசையமைப்பாளர் ஹில்தர் ஹில்டர் குட்னடாட்டிர் தனது ஏற்புரையில், "இசையை தங்களுக்குள் கேட்டுக் கொண்டிருக்கும் அனைத்து சிறுமிகள், பெண்கள், அன்னைகள் மற்றும் மகள்களுக்கு, தயவு செய்து உரக்கப் பேசுங்கள். உங்கள் குரல்களை நாங்கள் கேட்க வேண்டும்" என்று சொன்னது நெகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. இந்தப் பிரிவில் விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் இவரே.


ப்ரீ லார்சன், சிகோர்னி வீவர், கால் கடாட்

> 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஜோக்கர், நடிகர், இசை என இரண்டு பிரிவுகளில் மட்டுமே வென்றது. 10 பிரிவுகளில் பரிந்துரையான தி ஐரிஷ்மேன் ஒரு விருதைக் கூட வெல்லாமல் ஏமாற்றம் தந்தது.

> 10 பிரிவுகளில் போட்டியிட்ட 1917 திரைப்படம் ஒளிப்பதிவு, ஒலிக்கலவை, கிராபிக்ஸ் பிரிவுகளில் வென்றது. க்வெண்டின் டாரண்டினோவின் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் உறுதுணை நடிகர், தயாரிப்பு வடிவமைப்பு பிரிவுகளில் வென்றது.

> திரைப்படங்களின் இசையின் முக்கியத்துவம் பற்றிய ஒரு தொகுப்பை வழங்க அமெரிக்க இசைக் கலைஞர், லின் மானுவல் மிரண்டா மேடையில் தோன்றினார். இந்த காணொலித் தொகுப்பில் பேக் டு தி ஃபியூச்சர், ராக்கி, 8 மெய்ல் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலிருந்து பிரபலமான இசை, பாடல்கள் இடம்பெற்றன. இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த ஜெய் ஹோ பாடலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 8 மைல் திரைப்படத்திலிருந்து ராப் இசைக் கலைஞர் எமினெம் பாடிய லூஸ் யுவர்ஸெல்ஃப் பாடலை மேடையில் பாடினார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.


ரெபெல் வில்சன் - ஜேம்ஸ் கார்டன்

> சிறந்த கிராஃபிக்ஸ் விருதை 1917 வென்றது. இந்த விருதை அறிவிக்க காட்ஸ் (cats) என்ற படத்தில் நடித்த ரெபெல் வில்சன், ஜேம்ஸ் கார்டன் இருவரும் பூனை போல உடையணிந்தே மேடைக்கு வந்தனர். மோசமான கிராபிக்ஸ் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளான திரைப்படம் காட்ஸ். வசூல் ரீதியாக பெரும் தோல்வியும் அடைந்தது. இதை கிண்டல் செய்யும் விதமாக இந்த இரண்டு நடிகர்களும் பேசுகையில், "ஒரு திரைப்படத்தில் நல்ல கிராஃபிக்ஸின் முக்கியத்துவம் எங்களை விட வேறு யாருக்கும் நன்றாகத் தெரியாது" என்று குறிப்பிட்டு சிரிக்க வைத்தனர்.

> சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை ஜோஜோ ராபிட் படத்துக்காக டைகா வைடீடி வென்றார். இவர் மாஓரி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் பழங்குடி இனக் கலைஞர் இவரே. தனது விருதை உலகம் முழுவதும் இருக்கும் பழங்குடி இன சிறுவர்களுக்கு வைடீடி அர்ப்பணித்தார். மேலும் கடந்த வருடம் அகாடமியின் வாழ்நாள் சாதனையாளருக்கான கவர்னர் விருதுகளைப் வென்றவர்களைப் பற்றி பேச வந்த வைடீடி, "டோங்க்வா, டாடாவியம், சுமாஷ் உள்ளிட்ட பழங்குடிகளின் மூதாதையர் இடத்தில் தான் நாம் கூடியிருக்கிறோம் என்பதை அகாடமி ஏற்றுக்கொள்கிறது. நமது திரைத்துறை வாழ்ந்து, வேலை செய்து கொண்டிருக்கும் இந்த நிலத்தின் முதல் குடிகள் அவர்கள் தான் என்பதை அகாடமி ஒப்புக்கொள்கிறது" என்று குறிப்பிட்டார்.

> கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் செலவில், 3 லட்சம் சதுர அடியில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அகாடமி ஒரு பிரம்மாண்டமான அருங்காட்சியகத்தை உருவாக்கி வருகிறது. இது சினிமா வரலாறுக்கான பிரத்யேக அருங்காட்சியகமாக விளங்கவுள்ளது. இந்த வருடம் டிசம்பர் 14-ஆம் தேதி இந்த அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை நடிகர் டாம் ஹாங்க்ஸ் மேடையில் அறிவித்தார். 8 வருடத்துக்கு முன் துவங்கப்பட்ட இந்த கட்டிடத்துக்கான பணிகள் 2016ஆம் ஆண்டே முடிந்து, கட்டிடம் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிதித் திரட்டல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது தாமதமாகிப் போனது.


பாராசைட் தயாரிப்பாளரை பேச வைக்கச் சொல்லி கூச்சலிட்ட டாம் ஹாங்க்ஸ், சார்லீஸ் தெரான்

> விழாவில் கடைசியாக, சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற பாராசைட் திரைப்படக் குழுவைச் சேர்ந்தவர்கள் மேடையேறினர். விருதைப் பெற்றவுடன் படத்தின் ஒரு தயாரிப்பாளர் பேசி முடித்தார். இன்னொருவர் பேசுவதற்குள் அவர்களுக்கான வெளிச்சம் நீக்கப்பட்டு விருதை அறிவித்த நடிகை ஜேன் ஃபோண்டாவின் பக்கம் வெளிச்சம் போனது. ஆனால் இன்னொரு தயாரிப்பாளரையும் பேச வைக்க வேண்டும் என்று முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த டாம் ஹாங்க்ஸ், சார்லீஸ் தெரான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வெளிச்சத்தை மீண்டும் கொண்டு வரச் சொல்லி கூச்சல் போட, மீண்டும் வெளிச்சம் வந்து இன்னொரு தயாரிப்பாளரும் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x