Published : 21 Jan 2020 11:58 AM
Last Updated : 21 Jan 2020 11:58 AM

என் தந்தையின் மரணத்துக்கு மாரடைப்பே காரணம்: 'தி ராக்' ஜான்ஸன் விளக்கம்

என் தந்தை மாரடைப்பினால்தான் இறந்தார் என ஹாலிவுட் நடிகர் 'தி ராக்' ஜான்ஸன் விளக்கம் அளித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர் 'தி ராக்' என அழைக்கப்படும் ட்வேய்ன் ஜான்ஸனின் தந்தையும் முன்னாள் WWE மல்யுத்த வீரருமான ராக்கி ஜான்ஸன் கடந்த வாரம் மரணமடைந்தார். இவரது இயற்பெயர் வேட் பௌல்ஸ். இவரது மரணத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். மரணத்துக்கான காரணம் குறித்து ட்வேய்ன் ஜான்ஸனின் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இதுகுறித்துக் கேள்வியெழுப்பி வந்தனர்.

இந்நிலையில் தனது தந்தையின் மரணத்துக்கான காரணம் குறித்து விளக்கமளித்து ஜான்ஸன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

“எனது தந்தையின் மரணத்தின்போது எனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இதயம் நன்றியுணர்வால் நிரம்பியிருக்கிறது. உங்களால்தான் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

என் தந்தைக்கு என்ன ஆனது என்று உங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தீர்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. கடந்த செவ்வாய் அன்று கடும் சளியாலும், காலில் ரத்த உறைவினாலும் அவதிப்பட்டார். அந்த ரத்த உறைவு அவரது நுரையீரலுக்குச் சென்று அதை அடைத்துக் கொண்டது. இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது”.

இவ்வாறு ட்வேய்ன் ஜான்ஸன் கூறியுள்ளார்.

ராக்கி ஜான்ஸன் WWE வரலாற்றில் முதன்முதலாக முத்தரப்பு சாம்பியன் பட்டம் வென்றவர். 1991 ஆம் ஆண்டு மல்யுத்தப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் அதன் பிறகு தனது மகனான ட்வேய்ன் ஜான்ஸனுக்குப் பயிற்சி கொடுத்து 'தி ராக்' என்ற பெயரில் அவரை மல்யுத்தப் போட்டிகளில் அறிமுகப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x