Published : 14 Aug 2015 11:06 AM
Last Updated : 14 Aug 2015 11:06 AM

சினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர்!

உண்மையில் கியர்மோ டெல் டோரோவை ‘நல்ல இயக்குநர்' என்ற வார்த்தைகளில் மட்டுமே அடக்கிவிடமுடியாது. ஃபேரி டேல்ஸ் எனப்படும் தேவதைக் கதைகள், பழங்கால இருண்ட சக்திகள், சாத்தான்கள், சுரங்கப் பாதைகள், பூச்சிகள் ஆகியவை கியர்மோ டெல் டோரோவுக்கு (Guillermo Del Toro) மிகவும் பிடிக்கும். எனவே, அவரது எல்லாப் படங்களிலும் இவற்றின் தாக்கத்தைக் காண முடியும்.

‘த டெவில்ஸ் பேக்போன்'(The Devil's Backbone), ‘பான்ஸ் லேப்ரிந்த்'(Pan's Labyrinth) ஆகிய இரண்டு அருமையான படங்களைக் கொடுத்திருப்பவர் இவர். இவற்றோடு, ‘ஹெல்பாய்' என்ற காமிக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து இரண்டு அட்டகாசமான படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார். மிகச் சமீபத்தில் ‘பஸிஃபிக் ரிம்' (Pacific Rim) படத்தில் ஏலியன்களோடு போராடும் பிரம்மாண்ட இயந்திரங்களை உருவாக்கியவர்.

ஆனால் இவையும் கியர்மோ டெல் டோரோவைப் பற்றிய முழுமையான விவரங்களை நமக்கு அளித்துவிடாது. ‘The Strain' என்ற பெயரில், டிராகுலாவைப் போன்ற பண்டைய கால ரத்தக் காட்டேரி ஒன்று தற்காலத்தில் அமெரிக்காவில் நாசம் விளைவிப்பதைப் பற்றி மூன்று பாகங்களில் நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். அது இப்போது தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது (முதல் சீஸன் முடிந்து இப்போது இரண்டாவது சீஸன் வந்துகொண்டிருக்கிறது).

இத்தோடு, பீட்டர் ஜாக்ஸன் இயக்கிய ‘த ஹாபிட்' (The Hobbit) படங்களில் உண்மையில் இவர்தான் ஆரம்பத்தில் இயக்குநர். ஆனால் ஸ்டுடியோ மூலமான தாமதத்தினால் அதிலிருந்து விலகிவிட்டார். இருந்தும் அப்படங்களில் கியர்மோவின் பெயர், திரைக்கதையில் வருவதைக் காண முடியும். சில வீடியோ கேம்களின் உருவாக்கத்திலும் பணிபுரிந்திருக்கிறார். கூடவே, ஒருசில நல்ல ஸ்பானிஷ் திகில் படங்களையும் தயாரித்திருக்கிறார் (The Orphanage, Mama போன்றவை). இவற்றுக்கு சம்பந்தமே இல்லாத ‘குங்க்ஃபூ பாண்டா' படத்துக்கும் இவர்தான் தயாரிப்பாளர்.

கியர்மோவின் படங்களில், இப்போதுவரை கொண்டாடப்படும் ஒரு அருமையான உலகப்படமான ‘பான்ஸ் லேப்ரிந்த்'தை எடுத்துக்கொண்டால், அதன் உணர்வுபூர்வமான கதையோடு, அக்கதையில் இடம்பெறும் ஜந்துக்கள், அவற்றின் ஒப்பனை, அவற்றின் பின்னணி, அவற்றின்மூலம் சொல்லப்படும் கதை ஆகியவற்றில் மிகச் சிறிய துணுக்குகள் கூட அருமையான வேலைப்பாடுகளால் நிரம்பி, அவற்றின் அழகியல் நம்மைக் கவர்வதை உணர முடியும்.

இதுவேதான் அவரது பிற படங்களிலும் இருக்கும். ரத்தக்காட்டேரியாக இருந்தாலும் (The Strain), தேவதைகளாக இருந்தாலும் (Hellboy both parts), வினோதமான ஜந்துக்களாக இருந்தாலும் (அவரது எல்லாப் படங்களுமே), ஒரே ஒரு காட்சியைப் பார்த்தால்கூட அது கியர்மோ டெல் டோரோவின் படம்தான் என்பதை எளிதில் சொல்லிவிட முடியும் என்பதே அவரது திறமைக்குச் சான்று. தனது படங்களில் இடம்பெறும் இப்படிப்பட்ட வித்தியாசமான ஜந்துக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதமான தனித்துவத்தைப் பெற்றிருக்கும்படி பார்த்துக்கொள்வது கியர்மோவின் ஸ்டைல். ஹெல்பாயின் இரண்டாம் பாகத்தில் வரும் மிகப் பெரிய மரங்களின் தேவதை ஒரு உதாரணம்.

ஒரு திகில் படத்தை அழகியல் உணர்வுகளோடு எப்படி எடுப்பது என்பதற்குக் கியர்மோ டெல் டோரோவின் படங்கள்தான் உதாரணம். அவரது படங்களில் இடம்பெறும் கொடிய சக்திகளுடன் அவற்றை லேசாக ரசிக்கவும் வைக்கும் அம்சம் ஒன்றும் இருக்கும். அவற்றுக்கு உணர்வுகளும் இருக்கும். இப்படிப்பட்ட தேவதைகள் மற்றும் ராட்சத ஜந்துக்களை கியர்மோ படைப்பதற்கு, சிறு வயதில் அவருக்கு அவற்றின் மீது இருந்த விருப்பமே காரணம். இப்படிப்பட்ட வித்தியாசமான ஜந்துக்களை அப்போதிலிருந்து இப்போதுவரை கியர்மோ காதலிக்கிறார்.

அவற்றின்மீது அவருக்கு அளப்பரிய விருப்பம் இருக்கிறது. இதனாலேயே அவரது படங்களுக்கு ஒருவித வெறித்தனமான 'கல்ட்' ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மிகச் சில இயக்குநர்களுக்கே இப்படிப்பட்ட ஒரு ‘கல்ட்’ அந்தஸ்து இருக்கும் (பழைய ஜார்ஜ் லூகாஸ், க்வெண்டின் டாரண்டினோ, கய் ரிட்சீ, ஜான் கார்ப்பெண்டர், ஸாம் ரெய்மி, கெவின் ஸ்மித் ஆகியவர்கள் ‘கல்ட்' என்ற பதத்துக்குச் சரியான உதாரணங்கள்).

தற்போது ‘கிரிம்ஸன் பீக்' (Crimson Peak) என்ற, 1901-ல் நடைபெறும் கதையைக் கொண்ட ஒரு திகில் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் கியர்மோ. இதில் பண்டைய கால வீடு ஒன்று இடம்பெறுகிறது. கியர்மோவைப் பொறுத்தவரை, அந்த வீடும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை வகிக்கிறது. மனிதர்களைப் போல், செடிகொடிகளைப் போல், இந்த வீடும் மெல்ல மெல்ல அழுகுகிறது. அதன் மேல்பாகம் முற்றிலும் அழுகி, கீழ்பாகம் ஓரளவு நல்ல நிலையில் இருக்கும்படியான வீடு அது. உயிரோடு இருக்கும், சுவாசித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான ஜந்துவாக அந்த வீட்டைக் காட்டியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் கியர்மோ.

‘வழக்கமான திகில் படங்கள் இப்போதெல்லாம் மிக வேகமான எடிட்டிங்குடன், ரத்தம், கோரம் ஆகியவற்றில் நாம் பார்த்துப் பார்த்து சலித்துப்போன காட்சிகளுடனேயே எடுக்கப்படுகின்றன. எனவே, அவற்றைப் போல் இல்லாமல், சிறு வயதில் நாம் பார்த்து ரசித்த திகில் படங்களைப் போல ஒன்றை எடுக்கவேண்டும் என்பதாலேயே கிரிம்ஸன் பீக் படத்தை மெதுவானதாக, படிப்படியாக திகில் அம்சங்கள் வெளிப்படும்படி எடுத்திருக்கிறேன்.

இப்படத்தில் ஆடியன்ஸைப் பயத்தின் உச்சத்தில் விரட்டும் சில காட்சிகள் உள்ளன. ஆனால், அவை பழைய நாவல் ஒன்றைப் படிக்கும்போது எப்படி சிறுகச்சிறுக பய உணர்வு நம்மை ஆட்கொள்ளுமோ அப்படி இருக்கும்' என்று இப்படத்தைப் பற்றிக் கியர்மோ சொல்லியிருக்கிறார். கிரிம்ஸன் பீக் படத்தில் க்ராஃபிக்ஸுக்கு முக்கியத்துவம் குறைவு. இதில் வரும் பாழடைந்த மாளிகையை முற்றிலும் ஒரு செட்டாக உருவாக்கியே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் கியர்மோ. அந்த மாளிகையை நிர்மாணிக்க அவருக்கு ஆறு மாதங்கள் ஆயின.

கிரிம்ஸன் பீக் படத்தின் விசேஷக் காட்சியைப் பார்த்த திகில் கதைகளின் மன்னன் ஸ்டீஃபன் கிங், இப்படத்தை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார். அவ்வளவு எளிதில் யாரையும் புகழாதவர் ஸ்டீஃபன் கிங் என்பதை உணர்ந்தால் அவரது வார்த்தைகளின் முக்கியத்துவம் விளங்கும். அக்டோபரில் வெளியாகும் க்ரிம்ஸன் பீக் படத்துக்காக கியர்மோவின் வெறித்தனமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்துக்குப் பின்னர் 'பஸிஃபிக் ரிம்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கியர்மோ அறிவித்திருக்கிறார். கூடவே The Strain தொலைக்காட்சித் தொடரின் மூன்றாவது சீஸனுக்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது. இவற்றின்மூலம் தனது விசேஷமான, அழகும் கோரமும் ஒருங்கே நிரம்பிய ஜந்துக்களுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்க கியர்மோ தயார். இத்தனை விதமான வித்தியாசமான, உணர்வுகள் நிரம்பிய ஜந்துக்களை கியர்மோவின் படங்களைத் தவிர வேறெங்கும் பார்க்க இயலாது என்பதால் திகில் ரசிகர்கள் அவற்றைத் தவறவிட வேண்டாம்.

நுழைவாயில்

ஹாலிவுட்டில், தான் உருவாக்கிய, உருவாக்கிக் கொண்டிருக்கும் சாத்தான்கள், காட்டேரிகள், பூதங்கள், பிசாசுகள், மர்மமான ஜந்துக்கள் ஆகியவற்றால் பிரம்மாண்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவைத்திருக்கும் இயக்குநர் ஒருவர் இருக்கிறார். இத்தனை விதமான ஜந்துக்களுக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையையும் உருவாக்கி, அதனா லேயே ரசிகர்களின் மனதையும் கவர்ந்த அவரைத் தெரிந்துகொள்வதன் மூலம் இவ்வகைப் படங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டம் மாறக்கூடும்.

கியர்மோ டெல் டோரோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x