Published : 23 Sep 2019 11:36 AM
Last Updated : 23 Sep 2019 11:36 AM

நான்காம் முறையாக ‘எம்மி’ விருதுகளைக் குவித்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’

2019 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான ‘எம்மி’ விருது ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடருக்குக் கிடைத்துள்ளது.

’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் தன்னுடைய புத்தகங்களை எழுதி முடிப்பதற்கு பெரும் பின்னடைவாக இருந்ததாக 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ புத்தகங்களின் ஆசிரியர் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.

1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்பவர் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ டிவி தொடர். இத்தொடரின் முதல் எபிசோட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், 8-வது சீசனோடு கடந்த மே மாதம் 20-ம் தேதி நிறைவடைந்தது.

பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையால், இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர்தான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.

இந்நிலையில் டெலிவிஷன் அகாடமி ஃபவுண்டேஷன் என்ற அமைப்பால் ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கான ‘எம்மி’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான ’எம்மி’ சிறந்த தொலைக்காட்சித் தொடர் விருதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ 8-வது சீசன் தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை டிரியன் லானிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த பீட்டர் டிங்க்லேஜ் பெற்றுள்ளார். இது தவிர்த்து எழுத்து, இயக்கம், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் சேர்த்து மொத்தம் 59 விருதுகளை ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குவித்துள்ளது.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர் இதற்கு முன்பு 3 முறை ’எம்மி’ விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x