Published : 09 Sep 2019 10:51 AM
Last Updated : 09 Sep 2019 10:51 AM

கதவு அடைக்கப்பட்டுவிட்டது - 'ஸ்பைடர்மேன்' விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சோனி

'ஸ்பைடர்மேன்' விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சோனி நிறுவனத்தின் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு சோனி நிறுவனத்துக்கும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கிய மார்வல் நிறுவனத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இனி 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஸ்பைடர்மேன் படங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் கேட்கும் மார்வெல் நிறுவனத்தின் கோரிக்கையை சோனி நிறுவனம் ஏற்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் சோனி - மார்வெல் கூட்டுத் தயாரிப்பு உருவாகும் ஸ்பைடர்மேன் படங்களில் இனி தலையிடுவதில்லை என்று விலகினார். இதை சோனி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தது.

ரசிகர்கள் இந்த விவகாரத்தை #savespiderman என்ற ஹேஷ்டேக் மூலம் உலக அளவில் ட்ரெண்டாக்கினர். இதனால் அடுத்த மார்வெல் படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் இடம்பெறுமா என்ற கேள்வி பரவலாக எழுந்து வந்தது.

இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சோனி நிறுவனத்தின் சிஇஓ டோனி வின்சிக்யூரா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இது குறித்துப் பேசியபோது, “ஸ்பைடர்மேன் விவகாரத்தின் கதவு அடைப்பட்டுவிட்டது. மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் உடன் ஸ்பைடர்மேன் படங்கள் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தன. நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். மார்வெல் நிறுவனத்தார் திறமையானவர்கள். அவர்களின் மேல் எங்களுக்குப் பெரிய மரியாதை இருக்கிறது. எங்களிடமும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். கெவின் ஃபீஜ் மட்டுமே இந்த வெற்றிக்கு முழு காரணம் இல்லை'' என்று டோனி தெரிவித்துள்ளார்.

சோனி நிறுவனத்தின் அறிவிப்பு மார்வெல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x