Published : 16 Jul 2019 05:46 PM
Last Updated : 16 Jul 2019 05:46 PM

ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் அடுத்து யார்? யார்? 

நடிகர்கள் லீ, அன்னா டீ அர்மாஸ், டேனியல் க்ரெய்க், நவோமி ஹாரிஸ், லஷானா லின்ச்

டேனியல் க்ரெய்கைத் தொடர்ந்து அடுத்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகரைப் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது பாண்ட் 25 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். இதன் பிறகு இந்தக் கதாபாத்திரத்தில் தான் தொடர விரும்பவில்லை என்பதை அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அமெரிக்க கருப்பின நடிகர் இட்ரிஸ் எல்பா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்துத் தரப்பையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ஒரு பெண் நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'கேப்டன் மார்வல்' படத்தில், நாயகியின் உயிர்த் தோழி கதாபாத்திரத்தில் நடித்த லஷானா லின்ச் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவுள்ளார். இது பற்றி தற்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஜேம்ஸ் பாண்ட் படத்திலேயே காட்சி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. 

ஹாலிவுட்டில் மீ டூ மற்றும் டைம்ஸ் அப் உள்ளிட்ட முன்னெடுப்புகளுக்குப் பின், பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளன. பிரதான கதாபாத்திரங்களில் பெண் நடிகர்களை நடிக்க வைக்கும் போக்கு நிலவி வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக லஷானாவின் தேர்வும் பார்க்கப்படுகிறது. 

அடுத்த பாண்ட் படத்தின் கதாசிரியர் ஃபோபி வாலர் ப்ரிட்ஜ்தான் இந்த தேர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. 007 என்ற பெயர் ரகசியப் போலீஸுக்கானது என்பதால் பழைய ஜேம்ஸ் பாண்டிடமிருந்து அந்தப் பட்டத்தை மட்டுமே பெற்றுக்கொள்கிறார் புதிய 007. 


லஷானா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம்

மேலும் இனி பாண்ட் கேர்ள்ஸ் என்ற பதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும், பாண்ட் பெண்மணி (Bond Women) என்ற பதமே பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்த புதிய அறிவிப்புக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டுமே ரசிகர்களிடமிருந்து வந்துள்ளது. 

யாரும் எதிர்பார்க்காத சிந்தனை, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு நடிகரை இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது நல்ல முயற்சி என்று ஒரு பக்கம் பாராட்டுகள் வந்தாலும், டிஸ்னியின் மெர்மெய்டாக ஒரு கருப்பினப் பெண், ஸ்பைடர்மேனின் காதலியாக ஒரு கருப்பினப் பெண், தற்போது ஜேம்ஸ் பாண்டாக ஒரு கருப்பினப் பெண், இப்படி சமூக அரசியல் காரணங்களுக்காக கதாபாத்திரங்களைச் சிதைக்காதீர்கள். இதெல்லாம் பெண்ணியத்தில் வராது என்று எதிர்ப்புகளும் வந்துள்ளன. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x