Published : 23 Jun 2015 11:23 AM
Last Updated : 23 Jun 2015 11:23 AM
டைட்டானிக், அப்போலோ 13 உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் சிக்கி பலியானார்.
ஃபீல்ட் ஓஃப் ட்ரீம்ஸ், பிரேவ்ஹார்ட், டைட்டானிக், ஏலியன்ஸ், அப்போலோ,13, அவதார், எ பியூட்டிஃபுல் மைண்ட், ஸ்டார் ட்ரெக் பாகம்- 1, 2 போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர் ஜேம்ஸ் ஹார்னர் (61).
அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா அருகே திங்கள்கிழமை காலை தனது சொந்த விமானத்தில், ஹார்னர் பயணித்துக் கொண்டிருந்தபோது அவரது விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கரமான விபத்தில், ஹார்னர் பலியானது உறுதி செய்யப்பட்டதாக அவரது உதவியாளர் சில்வியா பாட்ரிக்ஜா தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட நிலைத் தகவலில், "மிகவும் அருமையான பெருந்தன்மை வாய்ந்த மாபெரும் ஆற்றல் கொண்டவரை இழந்துவிட்டோம். அவர் தனக்கு விருப்பமானதை செய்து கொண்டிருக்கையிலேயே உயிரிழந்துவிட்டார். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜேம்ஸ் ஹார்னர் தனது சொந்த விமானத்தை ஓட்டிக் கொண்டு சென்றபோது விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் விபத்துக்கான காரணம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
2 முறை ஆஸ்கர் விருது, 4 கிராமி விருதுகள், கோல்டன் க்ளோப் என ஜேம்ஸ் ஹார்னர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இவர் இசை அமைத்த 'டைட்டானிக்' திரைப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், ஒரு விழாவில் பேசும்போது, "இந்த விருதுகள் படத்தின் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னரையே சாரும். நான் ஒரு கப்பலை மட்டுமே உருவாக்கினேன். அதற்கு இசை மூலம் உயிர் கொடுத்தது ஹார்னர்” என்று பெருமிதத்துடன் கூறினார் கேமரூன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT