Published : 06 Apr 2015 04:53 PM
Last Updated : 06 Apr 2015 04:53 PM
'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' திரைப்படத்தின் ஏழாவது பாகமான 'பியூரியஸ் 7' திரைப்படம், வெளியான 3 நாட்களில் அமெரிக்காவில் மட்டும் 143.6 மில்லியன் டாலர்கள் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த வெள்ளிகிழமை வெளியான 'ஃபியூரியஸ் 7', இதற்கு முன் 'கேப்டன் அமெரிக்கா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியான போது படைத்த சாதனையை எளிதாக முறியடித்தது. இதோடு, ஹாலிவுட் வரலாற்றில் அதிக முதல் 3 நாட்கள் வசூல் என்ற டாப் 10 பட்டியலில் 9-வது இடத்தை 'பியூரியஸ் 7' படைத்தது.
'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படங்களில் நடித்து வந்த நடிகர் பால் வாக்கர் மறைவுக்கு பின் வெளியாகும் திரைப்படம் என்பதால், ஆரம்பம் முதலே இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பால் வாக்கரை கடைசியாக ஒரு முறை திரையில் காண ரசிகர்கள் திரையரங்குக்கு படை எடுத்துள்ளதாக ஹாலிவுட் பத்திரிகைகள் வர்ணித்துள்ளன. 2013-ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் 40 வயதான பால் வாக்கர் உயிரிழந்தார்.
பால் வாக்கரைப் போல இருப்பவர்கள் மற்றும் டிஜிட்டலில் பால் வாக்கரை உருவாக்குதல் என நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, எஞ்சியிருந்த காட்சிகளை தயாரிப்பு தரப்பு முடித்தது. "பால் வாக்கரின் மறைவால், இதுவரை 'ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' படங்களைப் பார்க்காதவர்கள் கூட இந்த பாகத்தை பார்க்க வருகிறார்கள். இந்த வெற்றி பால் வாக்கரையே சேரும்" என்று ஹாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர் ஃபில் காண்ட்ரினோ கூறியுள்ளார்.
உலகளவில் 10,500 திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'ஃபியூரியஸ் 7' 240.4 மில்லியன் டாலர்களை (3 நாட்களில்) வசூலித்துள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களில், முதல் 3 நாட்களில் அதிகபட்ச வசூலை எட்டியதும் இந்த 7-வது பாகமே என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT