Published : 10 Jul 2017 04:19 PM
Last Updated : 10 Jul 2017 04:19 PM
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான புதிய ஸ்பைடர்மேன் திரைப்படம் உலகளவில் 257 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இப்படம் முதல் மூன்று நாட்களில் 117 மில்லியன் டாலர்களை வசூலித்தது.
ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடித்து மறு துவக்கம் (reboot) செய்யப்பட்ட ஸ்பைடர்மேன் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காததால் அந்த கதாபாத்திரத்துக்கு புதிய பரிணாமம் கிடைக்க ஏற்கனவே பிரபலமான மார்வல் சினிமாடிக் உலகில் மற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுடன் ஸ்பைடர்மேனும் இணைக்கப்பட்டது. கடந்த வருடம் 'கேப்டன் அமெரிக்கா சிவில் வார்' படத்தில், ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் மார்வல் சினிமாட்டிக் உலகில் ஒரு அங்கமாக அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அதன் 2வது மறுதுவக்கத்தின் முதல் படமாக 'ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்' திட்டமிடப்பட்டது. முந்தையப் படங்களைப் போல அல்லாமல், இந்தத் திரைப்படத்தில் ஸ்பைடர்மேனாக மாறும் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரம் 15 வயது பள்ளி சிறுவனாக சித்தரிக்கப்பட்டிருந்தது. ஸ்பைடர்மேனாக இளம் நடிகர் டாம் ஹாலண்ட் நடித்திருந்தார்
மேலும் அயர்ன் மேன் / டோனி ஸ்டார்க் கதாபாத்திரம், ஸ்பைடர்மேனை கண்காணித்து வழிநடத்துபவராக இந்தப் படத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து, விமர்சகர்களிடமிருந்து ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்' திரைப்படம் சர்வதேச அளவில் 257 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களில் 3வது பெரிய முதல் மூன்று நாள் வசூலாக இது பார்க்கப்படுகிறது. அதோட, இதுவரை வெளியான ஸ்பைடர்மேன் படங்களில் 2-வது பெரிய வசூல் இது.
மார்வல் சினிமாட்டிக் உலகில் தனி சூப்பர்ஹீரோவாக முதலில் அறிமுகம் செய்யப்பட்ட 'அயர்ன்மேன்' படம் முதல் மூன்று நாளில் 98.6 மில்லியன் வசூலித்திருந்தது. தற்போது அதை ஸ்பைடர்மேன் கடந்துள்ளது.
சர்வதேச அளவில் இன்னும் 40 சதவித நாடுகளில் ஸ்பைடர்மேன் இன்னும் வெளியாகவில்லை என்பதால், அங்கெல்லாம் வெளியாகும்போது மொத்த வசூல் இன்னும் கூடி புதிய சாதனைகளைப் படைக்கும் என பாக்ஸ் ஆஃப்ஸ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT