Last Updated : 27 Feb, 2017 11:23 AM

 

Published : 27 Feb 2017 11:23 AM
Last Updated : 27 Feb 2017 11:23 AM

ஆஸ்கரில் குளறுபடி: தவறாக அறிவிக்கப்பட்ட சிறந்த படத்துக்கான விருது

89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த படமாக 'மூன்லைட்' தேர்வு செய்யப்பட்டது. ஆனால் முதலில் ஏற்பட்ட குளறுபடியால 'லா லா லேண்ட்' சிறந்த படம் என அறிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை மாலை நடந்த ஆஸ்கர் விழாவில், சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க நடிகர், இயக்குநர் வாரன் பீட்டி மேடைக்கு வந்தார். முதலில் அவரிடம் தந்த உறையை வாங்கிப் படித்து, சிறந்த படம் 'லா லா லேண்ட்' என அறிவித்தார்.

படக்குழுவைச் சேர்ந்தவர்களும் மேடைக்கு வந்து விருதுகளைப் பெற்றனர். பிறகு நடுவர் குழுவைச் சேர்ந்த இருவர் மேடைக்கு வந்து நடந்த குளறுபடியை கூறினார்கள். வாரன் பீட்டிக்கு முதலில் தவறான உறை அளிக்கப்பட்டதே குளறுபடிக்குக் காரணம் என மேடையில் அறிவிக்கப்பட்டது. அதில், எம்மா ஸ்டோன் - லா லா லேண்ட் என இருந்ததால், யோசனையுடன் அதை அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.

பின்பு நடந்த குழப்பம் 'லா லா லேண்ட்' குழுவுக்கு தெரிய, அதன் தயாரிப்பாளர் ஜோர்டன், உரிய உறையை மேடையிலேயே காண்பித்து, இந்த விருதை 'மூன்லைட்' குழுவுக்கு வழங்குவதில் எனக்குப் பெருமையே என சூழ்நிலை உணர்ந்து சமாளித்தார். பிறகு 'மூன்லைட்' குழுவினர் மேடைக்கு வந்து விருதைப் பெற்றனர்.

ஆஸ்கர் விழாவில் இப்படியான குளறுபடி நடப்பது இதுவே முதல் முறையாகும்.



x