Published : 28 Feb 2017 01:33 PM
Last Updated : 28 Feb 2017 01:33 PM
'எக்ஸ் மென்' படங்களின் வரவேற்பு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் அதில் இருக்கும் ஒரு கதாபாத்திரம் எங்கு, எப்போது, எப்படி தோன்றினாலும் அதற்கான ஏகோபித்த வரவேற்பு மாறவே மாறாது. அது 'வோல்வரின்' (Wolverine).
இந்த கதாபாத்திரத்தின் புகழை மனதில் வைத்தே, வோல்வரினுக்கென தனியாக படங்கள் வர ஆரம்பித்தன. 'எக்ஸ் மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின்' மற்றும் 'தி வோல்வரின்' ஆகிய படங்கள் முறையே 2009 மற்றும் 2013ல் வெளியாகின.
தற்போது இந்த வரிசையில் மூன்றாவது படமான 'லோகன்' மார்ச் 3-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் வோல்வரினின் ஆக்ஷனோடு அவர் மனிதம் குறித்து பேசும் காட்சிகளும் நிறைய இருக்கும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. 2029ஆம் ஆண்டு நடப்பதாக கதைக்களன் உருவாக்கப்பட்டுள்ளது.
தனது பழைய வாழ்க்கையை விடுத்து, மெக்ஸிகோவின் எல்லைப் பகுதியில் குறைந்த பணத்திற்கு வண்டி ஓட்டி வாழ்ந்து வருகிறார் லோகன். உடல் நலிவுற்ற சார்ல்ஸ் க்ஸேவியர் மற்றும் கேலிபன் மட்டுமே அவரது நண்பர்கள். அமைதியாக வாழ நினைக்கும் லோகனுக்கு எதிர்பாராத விதமாக புதியதொரு கடமை அழைக்கிறது! தன்னைப் போலவே விசேஷ சக்திகள் கொண்ட லாரா என்கிற ஒரு சிறுமிக்கு பாதுகாப்பு தந்து காக்க வேண்டிய பொறுப்பு வந்துசேர்கிறது.
டொனால்ட் என்பவன் லாராவைத் துரத்திக் கொண்டிருக்கிறான். அமைதியாக சென்று வரும் தனது வாழ்க்கையில் மீண்டும் அதிரடி நுழைவதை லோகன் உணர, அவரது ஆக்ஷன் ஆரம்பமாகிறது.
வோல்வரினின் அட்டகாசத்தைத் திரையில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு அதோடு ஒரு சோகமும் இருக்கிறது. ஆம், ஹ்யூ ஜேக்மேன் வோல்வ்ரினாக தோன்றுவது இதுவே கடைசி முறை. இனி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என அறிவித்துவிட்டார்.
2000ம் ஆண்டு வெளியான முதல் 'எக்ஸ் மென்' படத்தில் வோல்வரினாக தோன்றிய ஹ்யூ ஜேக்மேன், 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்துக்கு விடை கொடுத்துள்ளார். ஆனால் ராப்டர் டவுனி ஜூனியரின் 'அயர்ன் மேன்' போல், ஜானி டெப்பின் 'ஜாக் ஸ்பாரோ'வைப் போல், ஹ்யூ ஜேக்மென் என்றால் வோல்வரின் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
135 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தி வோல்வரின் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT