Published : 15 May 2017 03:54 PM
Last Updated : 15 May 2017 03:54 PM
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கை ரிச்சி இயக்கத்தில் வெளிவந்த 'கிங் ஆர்த்தர்' படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் ஏமாற்றம் தந்துள்ளது. சென்ற வாரம் வசூலில் முதலிடத்தில் இருந்த 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 2' இந்த வாரமும் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
சார்லி ஹன்னம், ஜூட் லா, எரிக் பானா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஃபேண்டஸி படம் 'கிங் ஆர்த்தர்: லெஜண்ட் ஆஃப் தி ஸ்வார்ட்'. இயக்குநர் கை ரிச்சி, ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்த 'ஷெர்லாக் ஹோம்ஸ்' படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியவர். மிக ஸ்டைலான காட்சியமைப்புகளுக்கும், நகைச்சுவைக்கும், வேகமான திரைக்கதைக்கும் பெயர் பெற்றவர். சரித்திரப் பின்னணியில் கற்பனை கலந்து உருவான 'கிங் ஆர்த்தர்' படத்தின் ட்ரெய்லர் வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஆனால் படத்துக்கான விமர்சனம் மோசமாக வர ஆரம்பிக்க அது பாக்ஸ் ஆபிஸிலும் எதிரொலித்தது. ரசிகர்களையும் படம் ஈர்க்கவில்லை என்பதால், வசூலில் இரண்டாம் இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (12ஆம் தேதி) வெளியான இந்தப் படம், மூன்று நாட்களில் 14.7 மில்லியன் டாலர்கள் மட்டுமே வசூலித்தது. இந்த படத்தின் பட்ஜெட் 175 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவைப் படமான 'ஸ்னாட்ச்ட்' 17.5 மில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 63 மில்லியன் டாலர்களை இந்த வாரம் வசூலித்து 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 2' இரண்டாவது முறையாக மீண்டும் முதலிடம் பெற்றது. இதுவரை அந்தப் படம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர்களையும் உலகளவில் 630 மில்லியன் டாலர்களையும் வசூலித்துள்ளது.
இந்திய உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியான 'ஏலியன்: கவனெண்ட்' படம் அடுத்த வாரம் தான் அமெரிக்காவில் வெளியாகவுள்ளது. ஏலியன் படங்களும், இயக்குநர் ரிட்லி ஸ்காட்டும் அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பதால், 'ஏலியன்: கவனெண்ட்' வசூலில் முதலிடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT