Last Updated : 04 Apr, 2017 03:22 PM

 

Published : 04 Apr 2017 03:22 PM
Last Updated : 04 Apr 2017 03:22 PM

புதிய நாயகனுடன் மீண்டும் திரைக்கு வரும் ஸ்பைடர்மேன்

ஸ்பைடர்மேன் படத்தின் மறுதொடக்கமாக (ரீபூட்), ஸ்பைடேர்மேன் ஹோம்கமிங் படம் ஜூலை 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான ஸ்பைடேர்மேன் உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளது. ஹாலிவுட்டில் முதன்முதலாக 2002-ஆம் வருடம் ஸ்பைடர்மேன் திரைப்படமாக உருவானது. தொடர்ந்து அந்த வரிசையில் மேலும் இரண்டு பாகங்கள் 2004 மற்றும் 2007ஆம் ஆண்டுகள் வெளியாயின. அனைத்துமே பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை அள்ளின.

மீண்டும் 2012ஆம் ஆண்டு, மார்க் வெப் இயக்கத்தில் ஸ்பைடேர்மேன் மறுதொட்டக்கமாக (ரீபூட்) தி அமேசிங் ஸ்பைடேர்மேன் படம் வெளியானது. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றாலும், 2014-ல் வெளியான இதன் இரண்டாம் பாகம், கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. எனினும் வசூல் வெற்றியால் 3-ஆம் பாகம் 2016-ல் வெளியாக திட்டமிட்டப்பட்டு, பின்னர் தயாரிப்பு தரப்பு சிக்கலால் அந்த பாகம் கைவிடப்பட்டது.

2016-ஆம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஸ்பைடேர்மேன் கதாபாத்திரம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அவெஞ்சர்ஸ் கூட்டணியுடன் ஸ்பைடேர்மேன் தோன்றியது அதுவே முதல் முறை. தொடர்ந்து ஸ்பைடேர்மேன் படத்தின் மறுதொடக்கம் திட்டமிட்டப்பட்டது.

குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்ற டாம் ஹாலண்ட் புதிய ஸ்பைடர்மேனாக தோன்றவுள்ளார். அயர்ன்மேன் டோனி ஸ்டார்க் உதவியுடன், வல்ச்சர் என்ற புதிய வில்லனை ஸ்பைடர்மேன் எதிர்க்குமாறு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

மார்வல் சினிமாட்டிக் யூனிவர்ஸில் ஸ்பைடர்மேன் பாத்திரம் இணைந்தபிறகு வெளியாகும் திரைப்படம் என்பதாலும், மேலும் ராபர்ட் டவுனி ஜூனியரும் அயர்ன் மேனாக தோன்றவுள்ளதாலும் இந்த புது ஸ்பைடர்மேனுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜூலை 7-ஆம் தேதி உலகளவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.