Published : 27 Jun 2019 07:21 PM
Last Updated : 27 Jun 2019 07:21 PM
Annabelle முதல் பாகம் முடிந்து 3 வருடங்களுக்கு பிறகு தொடங்குகிறது ’Annabelle comes Home’ படத்தின் கதை.
1970ஆம் ஆண்டு பேய்களை விரட்டும் நிபுணர்களான Ed and Lorraine தம்பதியினர் அமானுஷ்யங்கள் நிறைந்த Annabelle பொம்மையை வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள். அவர்களின் வீட்டில் இருக்கும் அமானுஷ்ய பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் ஒரு சிறிய அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அந்தப் பொம்மையை வைக்கிறார்கள்.
ஒரு வருடத்துக்குப் பிறகு தங்கள் மகள் ஜூடியை கவனித்துக் கொள்ள மேரி ஆலன் என்ற இளம்பெண்ணை நியமித்து விட்டு வெளியே செல்கிறார்கள்.
பள்ளிக்குச் செல்லும் ஜூடி அங்கே அடிக்கடி ஒரு விநோதமான மனிதர் தன்னைப் பின் தொடர்ந்து வருவதைப் பார்க்கிறாள். பின்னர் மேரி ஆலனின் தோழி Daniela இறந்து போன தந்தையை தொடர்பு கொள்ள வேண்டி ஜூடியின் வீட்டுக்கு வருகிறாள். பிறந்த நாள் பரிசாக ஜூடிக்கு ஸ்கேட்டிங் ஷூக்களைப் பரிசளித்துவிட்டு அவள் விளையாடச் சென்றதும் அமானுஷ்யப் பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த அருங்காட்சியகத்தில் நுழைகிறாள்.
அங்கே இருக்கும் அனைத்துப் பொருட்களையும் தொட்டுப் பார்க்கும் அவள் ஒரு கட்டத்தில் ’Annabelle’ பொம்மை இருக்கும் கண்ணாடிப் பெட்டியையும் திறந்துவிடுகிறாள். அதன் பின்னர் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. இதிலிருந்து மூவரும் தப்பித்தார்களா? Annabelle பொம்மைக்கு என்னவானது? என்பதே ’Annabelle comes Home’ படத்தின் மீதிக்கதை.
2013ஆம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ’The Conjuring’ திகில் பட வரிசையில் இது 7-வது படம். ’Annabelle’ பொம்மையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மூன்றாவது படம் இது.
அமானுஷ்யங்கள் நிறைந்த ஒரு வீடு, உள்ளே நண்பர்கள் மாட்டிக்கொள்வது என்ற வழக்கமான ஹாலிவுட் பேய்ப் பட டெம்ப்ளேட்தான். இருந்தாலும் இதற்கு முன்பு வந்த படங்களின் பல பேய்ப்பட க்ளிஷே காட்சிகளை இந்தப் படத்தில் வெகுவாக குறைத்திருக்கின்றனர்.
உதாரணமாக முகத்தில் கொடூர மேக்கப்பை பூசிக்கொண்டு கேமராவுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு பீதியைக் கிளப்புவது, ஏதேனும் ஒரு கதாபாத்திரம் இருட்டில் நின்று கொண்டிருக்கும்போது அதற்குப் பின்னால் ஒரு பேய் திடீரென்று தோன்றி பயமுறுத்துவது போன்ற காட்சிகள் எல்லாம் இதில் குறைவு. கதை முழுவதுமே ஒரு த்ரில்லர் படத்தைப் போலவே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
ஆனாலும், முதல் ஒரு மணி நேரம் எந்தத் திருப்பமும் இல்லாமல் தட்டையாகச் செல்வது படத்தின் மிகப்பெரிய குறை. பல இடங்களில் கொட்டாவி வருகிறது. இரண்டாம் பாதியின் நிமிர்ந்து உட்கார வைக்கும் சில காட்சிகள்தான் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. இதற்கு முந்தைய படங்களில் இல்லாத வகையில் இதில் வரும் பல நகைச்சுவை வசனங்கள் கூடுதல் பலம் சேர்க்கின்றன.
திரைக்கதையில் கவனம் செலுத்தி, முதல் பாதியை இன்னும் சுவாரஸ்யபடுத்தியிருந்தால் ’The Conjuring’ அளவுக்கு பேசப்பட்டிருக்கும் ’Annabelle comes Home’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT