Published : 21 May 2019 05:28 PM
Last Updated : 21 May 2019 05:28 PM
1975-ம் ஆண்டு சென்னை உள்ளிட்ட இந்தியா முழுதும் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜாஸ்’ படம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. சுறா மீனை வைத்து மக்களை மிரட்டினார் ஸ்பீல்பெர்க். சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் குறித்த அலசல் பார்வை இது.
சென்னையில் தமிழ்ப் படங்களுக்கு இணையாக ஆங்கிலம் மற்றும் இந்திப் படங்கள் கோலோச்சிய காலம் அது. ஹாலிவுட் படங்களும், ஜேம்ஸ்பாண்ட் படங்களும் போட்டி போட்டு ரசிகர்களை ஈர்த்தன. புரூஸ்லீ மறைந்து சில நாட்கள் கழித்து ஆனந்த் தியேட்டரில் வெளியான ‘எண்டர் தி டிராகன்’ சக்கைப்போடு போட்டது என்றால், கேசினோ திரையரங்கில் வெளியான ‘ஜாஸ்’ பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரசிகர்களை, குறிப்பாக குழந்தைகளைப் பெரிதும் ஈர்த்தது ஜாஸ் திரைப்படம். உலகெங்கும் இந்த புதிய யுத்தி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு மீன் இவ்வளவு மிரட்டுமா? என்ற கேள்வி, படத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்களான ரிச்சர்ட் டி ஜானுக், டேவிட் ப்ரவுன் ஆகிய இருவரும், பீட்டர் பென்ச்லீ எழுதிய நாவலான 'Jaws' பற்றித் தெரிந்து கொள்கின்றனர். சிறிய நகாத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒரு பெரிய வெள்ளை சுறா மீனைப் பற்றியும், அதைக் கொல்வதற்காக கடல் பயணம் மேற்கொண்ட மூன்று நபர்களையும் பற்றி பேசுவதே 'Jaws' நாவல்.
அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரே இரவில் படித்து முடித்த இருவரும், உடனடியாக இதைப் படமாக்கியே தீரவேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஆனால், நூற்றுக்கணக்கான படங்களைத் தயாரித்து ஜாம்பவானாகத் திகழ்ந்த யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் நிறுவனம், இந்த மாதிரி ஒரு படத்தைத் தயாரிப்பது அதுவே முதன்முறை.
தலையும் புரியாமல், வாலும் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் ரிச்சர்டும், டேவிட் ப்ரவுனும். இந்தப் படத்தை இயக்க முதலில் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநரான ஜான் ஸ்டர்ஜஸ் ஒப்பந்தம் செய்யப்படுகிறார். ஆனால், ஒரு சுறா மீனை எப்படி பிரதான பாத்திரமாகக் காட்டுவது என்கிற குழப்பத்தில் அவர் பின்வாங்கிவிடுகிறார்.
இந்தச் சமயத்தில்தான் இதே யுனிவர்ஸல் நிறுவனத்துக்காக ‘The Sugarland Express’ என்ற தனது முதல் முழுநீளப் படத்தை இயக்கிய 26 வயதே ஆகியிருந்த ஸ்பீல்பெர்க்கின் நினைவு, ரிச்சர்ட் மற்றும் டேவிட் ப்ரவுனுக்கு வருகிறது. (இதற்கு முன் நாம் பார்த்த ஸ்பீல்பெர்க் இயக்கிய Duel திரைப்படம், முதலில் தொலைக்காட்சிப் படமாக எடுக்கப்பட்டு, பின்னர் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியானது நினைவிருக்கலாம்).
ஸ்பீல்பெர்க்கை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்த தயாரிப்பாளர்கள், அவரிடம் பீட்டர் பென்ச்லீயின் நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொல்கின்றனர். அந்தப் புத்தகத்தால் பெரிதும் ஈர்க்கப்படும் ஸ்பீல்பெர்க், அதைப் படமாக்க ஒப்புக்கொள்கிறார். 3.5 மில்லியன் டாலர்கள் பட்ஜெட், 55 நாள் ஷூட்டிங் என முடிவு செய்யப்படுகிறது. 1974-ம் ஆண்டு முதல் நாள் படப்பிடிப்புடன் தொடங்குகிறது ‘ஜாஸ்'.
அமிட்டி தீவின் கடற்கரை ஓரத்தில் ஒரு பீச் பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் குளிப்பதற்காக கடலை நோக்கி ஓடுகிறார்கள். முழு போதையில் இருக்கும் ஆணால், அந்தப் பெண்ணுக்கு ஈடாக ஓட முடியவில்லை. போதை தலைக்கேறி கரையிலேயே படுத்து விடுகிறான்.
நீந்தியபடி கடலின் உள்ளே சென்றுவிடும் அந்தப் பெண்ணை, ஏதோவொன்று நீருக்கடியிலிருந்து கொடூரமான முறையில் தாக்குகிறது. இப்படியான பரபரப்புடன் தொடங்குகிறது ’ஜாஸ்’ படத்தின் முதல் காட்சி.
மறுநாள் காலையில் போலீஸ் அதிகாரி ப்ரோடியின் வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. போனில் சொல்லப்பட்ட இடத்துக்குச் செல்லும் ப்ரோடி, கரையில் கண்ட காட்சியைப் பார்த்து உறைந்து நிற்கிறார். ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியிருக்கிறது. இது நிச்சயம் சுறா மீனின் தாக்குதல்தான் என்று உறுதி செய்யும் ப்ரோடி, கடற்கரையைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர முயல்கிறார்.
ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அமிட்டி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று, இதை அப்படியே மூடி மறைத்து விடுமாறு ப்ரோடிக்கு கட்டளையிடுகிறார் மேயர் லாரி வான். வேறுவழியின்றி தலையாட்டுகிறார் ப்ரோடி. சிறிது இடைவெளியிலேயே அடுத்த தாக்குதலும் நடக்கிறது.
உஷாராகும் காவல்துறை, சுறாவின் தலைக்கு விலை நிர்ணயம் செய்கிறது. உள்ளூர் வேட்டைக்காரரான குயிண்ட், தான் சுறாவைக் கொன்று கொண்டு வந்தால் 10,000 டாலர்கள் தரவேண்டும் என்று நிபந்தனை வைக்கிறார். இதற்கிடையே, கடல் ஆராய்ச்சியாளரான ஹூப்பர் என்பவரைக் காவல்துறை நியமிக்கிறது.
இறந்த பெண்ணின் உடலைக் கூறாய்வு செய்யும் ஹூப்பர், இந்தத் தாக்குதலுக்குக் காரணம் ஒரு ராட்சத சுறா என்று அடித்துக் கூறுகிறார். இந்நிலையில், மீனவர்கள் கூட்டம் ஒன்று சுறாவை வேட்டையாடக் கிளம்புகிறது. அன்று மாலையே ஒரு மிகப்பெரிய சுறாவைக் கொன்றுவிட்டும் கரை திரும்புகிறது.
காவல்துறையும், ஊர் மக்களும் சுறா ஒழிந்தது என கொண்டாடித் தீர்க்கின்றனர். ஆனால், சுறாவின் உடலை ஆய்வு செய்யும் ஹூப்பர், இது சாதாரண Tiger Shark என்றும், அதன் உடலில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த மனித உறுப்புகளும் இல்லை என்றும் ப்ரோடியிடம் கூறுகிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்த நாளே கடற்கரையில் மக்கள் குழுமியிருக்கும் ஒரு நேரத்தில் அடுத்த உயிரையும் காவு வாங்குகிறது ராட்சத ஆட்கொல்லி சுறா.
இந்தத் தாக்குதலில் ப்ரோடியின் மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதனால் கடும் கோபமடையும் ப்ரோடி, ஹூப்பர் மற்றும் குயிண்ட் உதவியுடன் சுறாவை வேட்டையாட கடலுக்குள் பயணம் செய்கிறார். இறுதியில் சுறா கொல்லப்பட்டதா? என்பதே ‘ஜாஸ்' படத்தின் கதை.
படத்தின் டைட்டிலுக்குப் பிறகு ஒரு பெண் கொல்லப்படும் காட்சியில் வேகமெடுக்கும் படம், எங்கும் நிற்காமல் டாப் கியரிலேயே இறுதிவரை பயணிக்கிறது. விஷுவல் எஃபெக்ட்ஸ் பெரிதாக வளராத காலகட்டம் என்பதால், படம் முழுவதும் செயற்கை சுறாவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஆனாலும், ஒரு காட்சியில் கூட அது பொம்மை என்று நம்ப முடியாதபடி காட்சிப்படுத்தப்பட்டிருப்பதே இயக்குநர் ஸ்பீல்பெர்க்கின் சாமர்த்தியம். அடிப்படையில் 'ஜாஸ்' நாவல் சீரியசாகச் செல்லும். ஆனால், அதைப் படமாக்கும்போது அப்படியே எடுத்துவிடாமல், படத்தில் சுவாரஸ்யத்தைக் கொண்டுவர ஆங்காங்கே பல நகைச்சுவை வசனங்களைத் தூவியிருப்பார் ஸ்பீல்பெர்க்.
பெரும்பாலான காட்சிகள் கடலில் எடுக்கப்பட்ட முதல் படமும் இதுவே. இதில், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு. படத்தை 55 நாட்களில் முடித்துத் தரவேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், படப்பிடிப்பு, மற்ற வேலைகள் என 159 நாட்கள் நீண்டது. இது ஸ்பீல்பெர்க்குக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
பின்னாட்களில் இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய ஸ்பீல்பெர்க், “ ‘ ஜாஸ்’ படம் எடுக்கும்போது ஏற்பட்ட நீண்ட கால இழுபறியால், என் சினிமா வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்தேன்” என்று கூறினார். ஏனெனில், அப்போதைய காலகட்டத்தில் ஒரு படம் எடுக்க உச்சபட்சமே 100 நாட்கள்தான்.
படத்தின் இறுதிக்காட்சி ஷூட்டிங்கின்போது, கோபத்தில் இயக்குநரான தன்னையும் தூக்கிக் கடலில் போட்டுவிடுவார்கள் என்று பயந்து படப்பிடிப்புக்குச் செல்லாமல் இருந்ததாக ஸ்பீல்பெர்க் நகைச்சுவையாகக் கூறினார்.
ஒரு வழியாகப் படம் முடிந்து, 1975-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வெளியானது . படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. ஒரு சுறா மீனை வைத்து இப்படிக்கூட படமெடுக்க முடியுமா என ரசிகர்கள் வியந்தனர். உலகெங்கும் பல கோடிகளைக் குவித்தது. விளைவு, ஹாலிவுட் வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படமாக ‘ஜாஸ்’ விளங்கியது. 45 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஹாலிவுட்டில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ‘ஜாஸ்’ 7-வது இடத்தில் இருக்கிறது.
சுறா மீனை வைத்து ஸ்பீல்பெர்க் எடுத்த பின்னர், அதைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான படங்கள் மீன்களை, கடல் விலங்குகளை மையமாக வந்துவிட்டாலும், ‘ஜாஸ்’-க்கு என்றுமே கிரேஸ்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT