Published : 29 Apr 2019 12:55 PM
Last Updated : 29 Apr 2019 12:55 PM
'அவெஞ்சர்ஸ்' படத்தைப் பார்த்து அழுகையை அடக்கமுடியாத இளம்பெண், சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிந்துள்ளது. கடந்த வருடம் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாம் பாகமான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' வெளியாகி, 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' ஏப்ரல் 26 அன்று வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடித்துள்ள இப்படத்தை, ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கியுள்ளனர்.
11 வருடங்கள், 21 படங்கள், நூற்றுக்கணக் கான தொலைக்காட்சி தொடர்ப் பகுதிகள், சில குறும்படங்கள், சில காமிக்ஸ் தொடர்கள், நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள் எல்லாம் சேர்ந்த உச்சகட்டம்தான் இந்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில் சீனாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
'அவெஞ்சர்ஸ்' படத்தைப் பார்த்து அழுகையை அடக்கமுடியாத இளம்பெண், சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
இதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ''சீனாவில் வெளியான எண்ட்கேமைத் தியேட்டரில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் 21 வயதான இளம்பெண் ஒருவர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடந்தது. படத்தைப் பார்த்த ரசிகை உணர்ச்சிகரமான காட்சிகளின்போது அழுதார். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த அவரால் ஒருகட்டத்தில் அழுகையை நிறுத்தமுடியாமல் போனது. இதனால் சுவாசத்தில் கோளாறு ஏற்பட்டு வேகமாக சுவாசிக்க முயற்சித்தார்.
எனினும் இறுதியில் மூச்சு விடமுடியாமல் சிரமப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் முதலில் இளம்பெண்ணுக்கு ஆக்சிஜன் அளித்து முதலுதவி செய்தனர். அதைத் தொடர்ந்து அவரைச் சாந்தப்படுத்தி இயல்பு நிலைக்கு மீட்டு வந்தனர். அந்தப் பெண் இப்போது நலமாக உள்ளார்'' என்று தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT