Published : 08 Apr 2019 06:06 PM
Last Updated : 08 Apr 2019 06:06 PM
இந்தியாவுக்குப் பயணப்பட்டது தனக்குள் தன்னைப் பற்றிய புதிய புரிதலை தட்டியெழுப்பியுள்ளது என நடிகர் வில் ஸ்மித் பதிவிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அதைப் பாராட்டுவதும், அதற்காகத் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்வதும் இங்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வு.
மேற்கத்திய பிரபலங்கள் பலரும் இந்தியாவுக்கு வந்து தங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் உணர்ச்சி பொங்க பகிர்ந்து, பாராட்டிப் பேசியுள்ளனர். மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், தன் வாழ்வில் இந்தியப் பயணமே மிகப்பெரிய திருப்புமுனை என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் இந்தியப் பயண அனுபவத்தை சிலாகித்து அதைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"அனுபவங்கள் மூலம் கடவுள் நமக்குக் கற்றுக் கொடுப்பார் என என் பாட்டி சொல்வார். இந்தியாவுக்குப் பயணப்பட்டு, அதன் வண்ணங்கள், மக்கள் மற்றும் இயற்கை அழகை அனுபவித்தது எனக்குள் என்னைப் பற்றிய, என் கலையைப் பற்றிய, உலகத்தின் உண்மைகளைப் பற்றிய புதிய புரிதலை தட்டியெழுப்பியுள்ளது" என்றார் வில் ஸ்மித்.
ஸ்மித், தான் கங்கா ஆரத்தி நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டதையும், இன்னும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் பிரபலமான ஹாலிவுட் நாயகர்களில் ஒருவர் வில் ஸ்மித். சர்வதேச அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். மென் இன் ப்ளாக், ஹிட்ச், பேட் பாய்ஸ் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்தவர்.
தற்போது கரண் ஜோஹரின் 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2' படத்தில் ஒரு பாடலில் நடனமாட இந்தியா வந்துள்ளார். தான் வாழ்க்கையில் செய்து முடிக்க ஆசைப்பட்ட விஷயங்களில், பாலிவுட் நடனமும் ஒன்று என வில் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT