Published : 06 Mar 2019 01:02 PM
Last Updated : 06 Mar 2019 01:02 PM
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ (Game of Thrones - GOT) ஆங்கிலத் தொடரின் 8ஆவது சீசனின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
1991ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய A Song of Ice and Fire என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டதே ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர். இத்தொடரின் முதல் எபிசோட் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடர் இதுவரை 7 சீசன்களாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் 10 பகுதிகள்.
பரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையாலும் இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது.
வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர் தான் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.
இத்தொடரின் இறுதி அத்தியாயம் தான் வரப்போகும் 8வது சீசன். அது எப்போது ஒளிபரப்பாகும் என கடந்த ஒரு வருடமாக ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ 8வது சீசனின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
முக்கிய கதாபாத்திரமான ஆர்யா ஸ்டார்க் எதையோ கண்டு பயந்து ஓடுவது போன்று தொடங்கும் ட்ரெய்லரில் ஜான் ஸ்னோ, டேனேரிஸ், டிரியன், ஜேமி லானிஸ்டர் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளது ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் புகழ்பெற்ற 'The winter is coming' என்ற வாக்கியத்தோடு சமூக வலைதளங்களில் பலரும் இந்த ட்ரெய்லரைப் பகிர்ந்து வருகிறார்கள்.
ஹோம் பாக்ஸ் ஆபிஸ் (HBO) நிறுவனம் தயாரிக்கும் இத்தொடர் வரும் ஏப்ரல் 14 அன்று ஒளிபரப்பாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT