Last Updated : 25 Feb, 2019 01:08 PM

 

Published : 25 Feb 2019 01:08 PM
Last Updated : 25 Feb 2019 01:08 PM

சிறந்த அயல்மொழிப் படம் வென்ற ரோமா: மெக்ஸிகோவுக்கு முதல் ஆஸ்கர்

91-வது அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில், 'ரோமா' திரைப்படத்துக்கு, சிறந்த அயல்மொழிப் படத்துகான விருது கிடைத்துள்ளது. ஆஸ்கர் வரலாற்றில், இதுவரை 8 மெக்ஸிக படங்கள் சிறந்த அயல்மொழிப் படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் வெல்வது இதுவே முதல் முறை.

ஆல்ஃபோன்சோ கொரான் இயக்கியுள்ள 'ரோமா', ஒரு கருப்பு வெள்ளைத் திரைப்படம். கதை 1970களின் மெக்ஸிகோவில் நடக்கிறது. நடுத்தர வர்க்க குடும்பத்தின் பணிப்பெண் ஒருவரை மையப்படுத்திய படம் இது. க்ளியோ என்ற அந்த பணிப்பெண்ணின் கதாபாத்திரம், கொரான் வீட்டில் அவரைப் பார்த்துக் கொண்ட பணிப்பெண் லிபோரியா என்பவரை வைத்து உருவாக்கப்பட்டதே. கொரான் இந்தப் படத்தை அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தார். 

விருதை வென்ற கொரான், "நான் அயல்மொழிப் படங்கள் பார்த்து வளர்ந்தவன். அதிலிருந்து நிறைய கற்றவன். ’சிட்டிசன் கேன்’, ’ஜாஸ்’, ’ரோஷமோன்’, ’காட்ஃபாதர்’, ’ப்ரீத்லெஸ்’ ஆகிய படங்கள் என்னை பாதித்தவை.

அலைகள் என்பதே இல்லை. கடல் மட்டும்தான் இருக்கிறது. இன்றைக்கு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள், நாம் அனைவரும் ஒரே கடலைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள்" என்று குறிப்பிட்டார். 

சிறந்த அயல்மொழிப் படத்தோடு, சிறந்த இயக்குநருக்கான விருதையும் ’ரோமா’ பெற்றது. சிறந்த ஒளிப்பதிவு விருதையும் இந்தப் படத்துக்காக கொரான் வென்றார். நெட் ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படுவதும், வெல்வதும் இதுவே முதல் முறை.

முன்னதாக, கோல்டன் க்ளோப், பாஃப்தா உள்ளிட்ட விருது விழாக்களிலும் சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான விருதை 'ரோமா' வென்றிருந்தது. 

இயக்குநர் ஆல்ஃபோன்சோ கொரான் இதுவரை எடுத்ததில் அவர் மனதுக்கு நெருக்கமான படமாகக் கருதப்படும் 'ரோமா', சிறந்த அயல்மொழி திரைப்படம், சிறந்த படம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இடம் பெற்றிருந்தது. இப்படி இரண்டு பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட ஐந்தாவது திரைப்படம் 'ரோமா'. இதற்கு முன்னதாக 'அமோர்' (2012), 'க்ரவுச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன்' (2000), 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' (1998), 'ஜீ' (1969) ஆகிய படங்கள் இப்படி இரண்டு பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x