Published : 28 Jul 2024 09:44 PM
Last Updated : 28 Jul 2024 09:44 PM
சான் டியாகா: ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மூலம் மீண்டும் மார்வெல் படங்களுக்குள் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ராபர்ட் டவுனி ஜூனியர்.
2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன் மேன்’ படத்தின் மூலம் தொடங்கிய ராபர்ட் டவுனி ஜூனியரின் மார்வெல் படங்களுடான பயணம் , 2019-ஆம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்துடன் முடிந்தது . இதில் டோனி ஸ்டார்க் என்கிற அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்திருந்தார்.
இவருக்கு, உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவரது அலட்சியமான உடல் மொழியும், கிண்டல் நிறைந்த பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை. 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரம் இறந்துவிடுவது போலக் கதை அமைக்கப்பட்டிருந்தது.
இப்படத்துக்குப் பிறகு ‘டூலிட்டில்’ என்ற படத்தில் ராபர்ட் டவுனி நடித்திருந்தார். ஆனால் அப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் தோல்வியை தழுவியது மட்டுமின்றி கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இதனையடுத்து க்றிஸ்டோபர் நோலனின் 'ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி நடித்திருந்தார். இதற்காக அவருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் கிடைத்தன.
இந்த சூழலில், இன்று (ஜூலை 28) அமெரிக்காவின் சான் டியாகா நகரில் காமிக் கான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்வெல் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. வரவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மூலம் மீண்டும் மார்வெல் படங்களுக்குள் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ராபர்ட் டவுனி ஜூனியர். ஆனால் இம்முறை ஹீரோவாக அல்லாமல் வில்லனாக. மார்வெல் காமிக்ஸின் பிரபல வில்லனான டாக்டர் டூம் என்ற கேரக்டரில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்க உள்ளார்.
இது மார்வெல் மற்றும் ராபர்ட் டவுனி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தை பழைய அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ருஸ்ஸோ ப்ரதர்ஸ் இயக்க உள்ளனர்.
Vikram interval scene recreated by RDJ pic.twitter.com/BKXS1NioFC
— ダンシングラージ (@DancingRaj) July 28, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT