Last Updated : 26 Jul, 2024 07:25 PM

 

Published : 26 Jul 2024 07:25 PM
Last Updated : 26 Jul 2024 07:25 PM

Deadpool & Wolverine - திரை விமர்சனம்: வியத்தகு ‘டபுள்’ ட்ரீட் அனுபவம்!

இந்த ஆண்டில் ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமென்றால் சந்தேகமே இல்லாமல் அது ‘டெட்பூல் & வோல்வரின்’ (Deadpool & Wolverine) தான். முந்தைய ‘டெட்பூல்’ இரு பாகங்களின் வெற்றி ஒரு பக்கமென்றால், அதை விட முக்கிய காரணம் வோல்வரின் கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வந்தது. இந்த இரு சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவு பூர்த்தி செய்துள்ளது என பார்க்கலாம்.

தன் வாழ்வின் முக்கிய நோக்கத்தை அடையும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் வேட் வில்சன்/டெட்பூல் (ரையான் ரேனால்ட்ஸ்). அவெஞ்சர்ஸ் குழுவில் சேர்வதற்கு கூட முயற்சி செய்கிறார். ஆனால் அவரது யுனிவர்ஸில் முக்கிய ‘ஆங்கர் பீயிங்’ ஆன லோகன் / வோல்வரின் இறந்து போய்விட்டதால் அவரது யுனிவர்ஸும் மெல்ல அழிகிறது. இதனால் டெட்பூலை தங்களுடன் சேர்த்துக் கொள்ள விரும்புகிறது காலத்தை கட்டுப்படுத்தும் டைம் வேரியன்ஸ் அதாரிட்டி (டிவிஏ) அமைப்பு.

ஆனால், அதில் விருப்பமில்லாத டெட்பூல், தனது யுனிவர்ஸை காக்க மற்றொரு யுனிவர்ஸில் வாழும் மற்றோரு வோல்வரினை (ஹ்யூ ஜாக்மேன்) தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார். இதனால் டிவிஏ அமைப்பில் இருக்கும் பாரடாக்ஸ் என்ற நபரின் மூலம் வாய்ட் எனப்படும் உலகுக்குள் இருவரும் போய் விழுகின்றனர். அங்கு ஆட்சி செய்யும் பிரதான எதிரியான கஸாண்ட்ரா (எம்மா கோரின்) என்ற பெண் உடனான மோதலை இருவரும் எதிர்கொண்டு அங்கிருந்து எப்படி தப்பினார்கள்? டெட்பூல் தன்னுடைய உலகை காப்பாற்றினாரா என்பதை வயிறு வலிக்க சிரிக்க வைத்து, பல்வேறு ஆச்சர்யங்களை தந்து சிலிர்க்கவும் வைக்கிறது ‘டெட்பூல் & வோல்வரின்’

படம் தொடங்கும்போதே டெட்பூல் கதாபாத்திரத்தில் ரகளையும் தொடங்கி விடுகிறது. படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் போடப்பட்ட விதமே நம்மை உள்ளிழுத்து விடுகிறது. அப்போது வேகமெடுக்கும் திரைக்கதை இறுதி வரை எங்கும் நிற்காமல் செல்லும் வகையில் எழுதப்பட்டதே இப்படத்தின் பெரும் பலம். குறிப்பாக, ஒவ்வொரு யுனிவர்ஸாக சென்று வோல்வரினை தேடும் காட்சி சரவெடி ரகம். மார்வெல் ரசிகர்களுக்கான ஆச்சர்யங்கள் இங்கிருந்தே தொடங்கி விடுகிறது. பின்னர் படம் முடியும் வரையும் எதிர்பாராத வகையில் பல ஆச்சர்ய கேமியோக்கள் அணிவகுக்கின்றன.

படம் முழுக்க டெட்பூல் கதாபாத்திரம் பேசும் அதிரடியான நகைச்சுவை வசனங்கள் ‘ஸ்ட்ரிக்ட்’ ஆக அடல்ட்ஸ் ஒன்லி ரகம். ஒவ்வொரு காட்சியிலும் அவர் அடிக்கும் கவுன்ட்டர்களுக்கு அரங்கம் சிரிப்பலையால் அதிர்கிறது. உதாரணமாக, கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஃபாக்ஸ் - டிஸ்னி இணைப்பு விவகாரத்தை கிண்டலடிப்பது, மற்ற மார்வெல் கதாபாத்திரங்கள், இன்னும் ஒருபடி மேலே போய் மார்வெல் தலைவர் கெவின் ஃபீஜையே முன்னெப்போதும் இல்லாத வகையில் கலாய்த்திருப்பது குபீர்.

‘வோல்வரின்’ கதாபாத்திரத்தை ரசிகர்கள் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறார்கள் என்பதை ஹ்யூ ஜாக்மேன் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கிடைக்கும் வரவேற்பில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்ற வகையில் அவருக்கே உரித்தான ஸ்டைலில் பல மாஸ் காட்சிகள் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக, க்ளைமாக்ஸில் வரும் ஒரு சண்டை காட்சி பெரிய திரையில் மட்டுமே காணக்கிடைக்கும் சிலிர்ப்பனுபவமாக இருக்கும்.

காமிக்ஸ் பரிச்சயம் இல்லாத ரசிகர்களும் புரிந்து கொள்ளும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும் படத்தில் வரும் ஏகப்பட்ட கேமியோக்கள் எல்லாம் புதிய பார்வையாளர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே. அதிலும் சில நுணுக்கமான அம்சங்கள் எல்லாம் சமீபமாக வெளியான மார்வெல் படங்கள், தொடர்களை பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். அதுபோன்ற காட்சிகள் புதிதாக பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மொத்தத்தில், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான திரை அனுபவமாகவும், மார்வெல் ரசிகர்களுக்கு ஆச்சர்யங்களுடன் கூடிய ‘டபுள் ட்ரீட்’ அனுபவமாகவும் இப்படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான இப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x