Last Updated : 07 Mar, 2024 07:43 PM

4  

Published : 07 Mar 2024 07:43 PM
Last Updated : 07 Mar 2024 07:43 PM

Nimona: தன்பாலின ஈர்ப்பாளர் உரிமையை அழுத்தமாக பேசும் அனிமேஷன் படைப்பு | ஆஸ்கர் திரை அலசல்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி ஆஸ்கரில் சிறந்த அனிமேஷன் படத்துக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படம் ‘நிமோனா’ (Nimona). 2015-ஆம் ஆண்டு என்.டி.ஸ்டீவன்சன் எழுதிய கிராபிக்ஸ் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் 2020-ஆம் ஆண்டே ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டது. இப்படத்தை முதலில் தயாரித்த ஃபாக்ஸ் நிறுவனத்தை வாங்கிய டிஸ்னி, இப்படத்தில் இடம்பெற்றிருந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த கருத்துகள் காரணமாக இதனை வெளியிட தயக்கம் காட்டியது. பலகட்ட பஞ்சாயத்துக்குப் பிறகு அன்னபூர்ணா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்தது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்றது.

எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஃபேன்டஸி கதைக்களத்தில், ஒரு மிகப் பெரிய மான்ஸ்டரிடமிருந்து நாட்டை காக்க மிகப் பெரிய தடுப்புச் சுவர்களை எழுப்பியிருக்கின்றனர். 1000 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அரசி, பொதுமக்களில் ஒருவராக இருந்த பாலிஸ்டர் என்ற சிறுவனை தத்தெடுத்து அவரை வீரனாக மாற்றுகிறார். பாலிஸ்டரை படைத்தலைவனாக உயர்த்தும் விழா ஒன்றில் எதிர்பாராத விதமாக பாலிஸ்டரின் வாளில் இருந்து வெளிப்படும் லேசர் ஒளி, அரசியைக் கொல்கிறது.

இந்தப் பழி பாலிஸ்டர் மீது விழும் நேரத்தில் ஒட்டுமொத்த அரசவையும் அவருக்கு எதிராக திரும்புகிறது. பாலிஸ்டரின் காதலரும், முக்கிய போர்வீரர்களின் ஒருவருமான அம்ப்ரோஸியஸ் கூட பாலிஸ்டரை நம்பவில்லை. பல ஆண்டுகளாக காவலர்களின் கண்ணில் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் பாலிஸ்டருக்கு உதவ முன்வருகிறார் நிமோனா என்ற இளம்பெண். குறும்புத்தனமும், உருவம் மாறக்கூடிய திறனும் கொண்ட அவரை மான்ஸ்டர் என்று ஒதுக்கி தள்ளுகின்றனர் ஊர் மக்கள். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இந்த இருவரும் சேர்ந்து பாலிஸ்டரின் பழியை துடைத்தெறிந்தார்களா என்பதே மீதிக்கதை.

ஹாலிவுட் அனிமேஷன் பட வரலாற்றில் தன்பாலின ஈர்ப்பு குறித்து இவ்வளவு அழுத்தமாக பேசிய ஒரு படம் இதுதான் என அடித்துச் சொல்லலாம். காரணம், இதுவரை வந்த அனிமேஷன் படங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் இடம்பெறும். அதை உடைத்து படத்தின் பிரதான கதாபாத்திரமே ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக இடம்பெறச் செய்து ஒரு புதிய கதவை திறந்துள்ளனர், இயக்குநர்கள் நிக் ப்ரோனா மற்றும் ட்ராய் குவேன் இருவரும்.

இது தவிர்த்து பார்த்தால் வழக்கமான அதே ஹாலிவுட் பாணி கமர்ஷியல் திரைக்கதைதான். ஆனால், அதை முடிந்தவரை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுற்றி வளைக்காமல் நேரடியாகவும் நேர்த்தியாகவும் சொல்லியிருப்பதே இந்தப் படத்தின் வெற்றியாகவும் அமைந்து விட்டது. தன்பாலின ஈர்ப்பு குறித்த காட்சிகளுமே கூட எந்த இடத்திலும் திணிக்கப்பட்டதாக இல்லாமல் போகிற போக்கிலேயே நமக்கு அந்தக் கதாபாத்திரங்களின் தன்மை மிக எளிமையாக உணர்த்தி விடுவது சிறப்பு.

எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாத பாலிஸ்டர் - நிமோனா இடையிலான காட்சிகளும், ஆரம்பத்தில் நிமோனாவை வெறுக்கும் பாலிஸ்டர் மெல்ல மெல்ல அன்பு செலுத்தத் தொடங்குவதும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. யானை, திமிங்கலம், பூனை, கொரில்லா என தொடர்ந்து நிமோனாவும், அதிரடியும், காமெடியும் கலந்த ஆக்‌ஷன் காட்சிகளும் கலகலப்புக்கு உதவுகின்றன.

நிமினோவின் ப்ளாஷ்பேக் காட்சி, க்ளைமாக்ஸுக்கு முன்னால் பாலிஸ்டரிடமிருந்து நிமோனா பிரிந்து செல்லும் காட்சி என எமோஷனல் அம்சங்களுக்கும் குறைவில்லாமல் ஒரு அனிமேஷன் படத்துக்கு என்ன தேவையோ அதை நிறைவாகவே தருகிறது ‘நிமோனா’. கார்ட்டூனும் அல்லாத, 3டியும் அல்லாத ஓர் இடைப்பட்ட பாணியில் இருக்கும் அனிமேஷன் ‘ஸ்பைடர்வெர்ஸ்’ படங்களின் அனிமேஷனை நினைவூட்டுகிறது.

மொத்தத்தில் இதுவரை Fairy Tale பாணியில் நாம் திரையில் பார்த்து வந்த அனிமேஷன் படங்களைப் போல அல்லாமல், மிக துணிச்சலாக LGBTQ+ குறித்து பேசியுள்ள ‘நிமோனா’ இளம் தலைமுறை பார்வையாளர்களுக்கு தன்பாலின ஈர்ப்பாளர் உரிமை குறித்த ஒரு புதிய பார்வையை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘நிமோனா’ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

முந்தைய கட்டுரை > Past Lives: கடந்த கால நினைவுகளை கிளறும் கொரியன் ‘96’

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x