Published : 11 Nov 2023 11:05 AM
Last Updated : 11 Nov 2023 11:05 AM
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமாக சூப்பர்ஷீரோ (இனி பெண் சூப்பர் ஹீரோக்களை சூப்பர்‘ஷீ’ரோக்கள் என்று குறிப்பிடலாம்) படங்களை கொடுத்து வரும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஐந்தாவது கட்டத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘தி மார்வெல்ஸ்’. சூப்பர்ஷீரோக்களை மையமாகக் கொண்டு பெண்ணால் இயக்கப்பட்ட இப்படம் மார்வெல் ஸ்டூடியாஸ் நிறுவனத்தின் முந்தைய வெற்றியை தக்க வைத்ததா என்று பார்க்கலாம்.
ஹாலா என்ற கிரகம் அழியும் தருவாயில் உள்ளது. தனது கிரகத்தின் இந்த நிலைக்கு காரணம் என்று கருதி, அவரை பழிவாங்க புதிய வில்லனாக உருவாகிறார் டெர்-பான் (ஸாவே ஆஷ்டன்). அவருக்கு குவான்டம் பேண்ட் எனப்படும் சக்திவாய்ந்த ஆபரணம் கிடைக்கிறது. அதன் இன்னொரு ஜோடி, பூமியில் இருக்கும் கமலா கான் / மிஸ். மார்வெல் என்று அழைக்கப்படும் டீன்-ஏஜ் சூப்பர்ஷீரோ ஒருவரிடம் இருக்கிறது. இந்த ஆபரணத்தில் இருந்து வெளிப்படும் சக்தியால், கரோல் டென்வர்ஸ் / கேப்டன் மார்வெல் (ப்ரீ லார்சன்), மோனிகா (டியோனா பாரிஸ்) மற்றும் மிஸ் மார்வெல் ஒருவர் இடத்துக்கு மற்றவர் இடமாறுகின்றனர். இந்த மூன்று சூப்பர்ஷீரோக்களும் இணைந்து டெர்-பானை தடுத்தார்களா? அவர்களது இடம் மாறும் பிரச்சினை சரியானதா? என்பதே ‘தி மார்வெல்ஸ்’ படத்தின் மீதிக் கதை.
கடந்த ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியான ‘மிஸ் மார்வெல்’ வெப் தொடரின் இறுதியில் இருந்து படம் தொடங்குகிறது. அனைத்து கதாபாத்திரங்களுமே மார்வெல் ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவை என்பதால் தேவையற்ற அறிமுகங்கள் எதுவும் இல்லாமல் படம் நேரடியாக மையக்கருவுக்குள் நுழைந்துவிடுகிறது. கமலா கான், கரோல் டென்வர்ஸ், மோனிகா ஆகியோரின் கூட்டணி ரசிக்க வைக்கிறது. குறிப்பாக மூவரும் இடம் மாறும் காட்சிகளும், ஸ்டண்ட்களும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கம்போல மார்வெல் படங்களில் வரும் காமெடி ஒன்லைனர்கள், சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் இதிலும் உண்டு. மனிதர்களை விழுங்கும் பூனை, பாடும் மக்களை கொண்டு கிரகம் போன்றவை திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்கு உதவியுள்ளன.
படத்தின் மிகப்பெரிய பிரச்சினை ஒரு வலுவான வில்லன் இல்லாதது. சமீபகாலமாக வெளியாகும் மார்வெல் படங்களில் ’தானோஸ்’ போன்ற ஒரு வலிமையான வில்லன் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. அல்லது தானோஸ் ஏற்படுத்திய தாக்கம் அவ்வாறானதாக இருக்கலாம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சிறுகச் சிறுக பில்டப் கொடுக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட தானோஸ் போன்ற வில்லனைத் தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த படத்தில் வரும் டெர்- பான் என்று பெண் வில்லனுக்கு அது போன்ற ஒரு வலுவான பின்னணியோ அல்லது நோக்கமோ இல்லாததால் அந்த கதாபாத்திரத்துடன் நம்மால் ஒன்றமுடியவில்லை.
படத்தின் மற்றொரு பலவீனம், அதன் எமோஷனல் காட்சிகள். அவை பார்க்கும் நமக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உதாரணமாக கமலா கான், கரோல் டென்வர்ஸ், மோனிகா மூவருக்கும் இடையிலான நட்பு, எமோஷனல் காட்சிகளில் அழுத்தமில்லை. ஆக்ஷன் காட்சிகளில் செலுத்திய கவனத்தை சற்றி எமோஷனல் காட்சிகளில் செலுத்தியிருக்கலாம். இதுவரை வெளியான மார்வெல் படங்களான ‘அவெஞ்சர்ஸ்’, ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’, போன்ற மல்டி-ஸ்டார்ரர் சூப்பர்ஹீரோ படங்களில் அந்த கதாபாத்திரங்களுக்கு இடையிலான எமோஷனல் காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். அதுவே அந்த கூட்டணி ஆடியன்ஸ் மனதில் பதிய காரணமாக இருந்தது. ஆனால் இந்த கூட்டணி அப்படியான விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. படத்தில் வரும் ஸ்பேஸ் ஜம்ப் பாயிண்ட் போல திரைக்கதை முழுக்க ஏராளமான ஓட்டைகள்.
படம் முழுக்க நம் கவனத்தை ஈர்த்து அப்ளாஸ் பெறுபவர் கமலா கானா நடித்திருக்கும் இமான் வெள்ளானி. டீன் ஏஜ் பெண்ணுக்கு உரிய அவரது குறும்பும், துறுதுறுப்பு ரசிக்க வைக்கிறது. கேப்டன் மார்வெலை நேரில் காணும்போது அவர் கொடுக்கும் வியப்பான ரியாக்ஷன்கள் சிறப்பு. படம் முழுக்க அவர் அடிக்கும் கவுன்ட்டர்களும் கலகலப்புக்கு உதவுகின்றன. கேப்டன் மார்வலாக வரும் ப்ரீ லார்சன், மோனிகாவாக வரும் டியோனா பாரிஸ், சாமுவேல் ஜாக்சன், ஸாவே ஆஷ்டன், ஸெனோபியா ஷ்ரோஃப், மோகன் கபூர் ஆகியோர் குறை சொல்லமுடியாத நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
தொழில்நுட்பரீதியாக குறை சொல்ல ஏதுமில்லை. மார்வெல் படங்களுக்கே உரிய வழக்கமான கலர்ஃபுல்லான லைட்டிங், ஒளிப்பதிவு. தரமான கிராபிக்ஸ். நிமிர்ந்து உட்கார வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் சிறப்பு. லாரா கார்ப்மேனின் பின்னணி இசையும் படத்துக்கு உதவியுள்ளது.
படத்தின் இறுதியில் வரும் போஸ்ட் கிரெடிட் காட்சியில் மிகமுக்கியமான ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் புகழ்பெற்ற ஒரு சூப்பர்ஹீரோ கூட்டணி இணைவதற்கான குறிப்பு அது. அந்த கதாபாத்திரம் திரையில் தோன்றும்போது அரங்கம் அதிர்கிறது.
முந்தைய MCU படமான ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3’ கொடுத்த முழுமையான திருப்தியை இப்படம் கொடுக்குமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி ஒரு வழக்கமான சூப்பர்ஷீரோ படத்தை எதிர்பார்த்துச் சென்றால் கொடுத்த டிக்கெட் பணத்துக்கு மோசமில்லாமல் பார்த்து வரலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT