Published : 03 Sep 2023 03:23 PM
Last Updated : 03 Sep 2023 03:23 PM

The Equalizer 3 Review: டென்ஸெல் வாஷிங்டனின் நடிப்பில் வசீகரமும் வன்முறையும்

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற டென்செல் வாஷிங்டன் - ஆன்டோய்ன் ஃபுகுவா கூட்டணியில் மூன்றாவது மற்றும் கடைசி பாகமாக பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் ‘தி ஈக்வலைஸர் 3’ படம் ரசிகர்களை ஈர்த்ததா? ஏமாற்றியதா? பார்க்கலாம்.

இரண்டாம் பாகத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு கதை தொடங்குகிறது. சிசிலியில் உள்ள ஒரு ஒயின் ஆலையில் தன்னுடைய ஆட்களை ஓய்வு பெற்ற டிஐஏ அதிகாரி ராபர்ட் மெக்கால் (டென்ஸல் வாஷிங்டன்) கொடூரமாக கொலை செய்ததை தெரிந்து கொள்கிறார் கேங்க்ஸ்டர் ஆன லோரென்சோ விட்டேல். இருவருக்கும் நடக்கும் பயங்கர சண்டையில் விட்டேல் கொல்லப்படுகிறார். விட்டேலின் பதின்ம வயது மகனால் ராபர்ட் முதுகில் சுடப்பட்டு அங்கிருந்து படுகாயத்துடன் தப்பிக்கிறார்.

மயக்கநிலைக்குச் செல்லும் அவர், ஜியோ போனூசி என்பவரால் மீட்கப்பட்டு அல்டாமொண்டே என்ற ஒரு சிறிய கடலோர நகரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு என்ஸோ அரிஸியோ (ரெமோ ஜிரோன்) என்ற மருத்துவர் ராபர்ட்டுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றுகிறார். மெல்ல குணமடையும் ராபர்ட், உள்ளூர் மக்களுடன் நெருக்கமாகிறார். அந்த நகரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ஆனால் விரைவிலேயே அந்த நகரம் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து கொள்ளும் ராபர்ட், அந்த நகரத்தையும் மக்களையும் அவர்களிடமிருந்து விடுவிக்க முடிவு செய்கிறார். ராபர்ட்டின் எண்ணம் நிறைவேறியதா? மாஃபியா கும்பலுக்கும் ராபர்ட் மெக்காலுக்கு நடந்த யுத்தத்தில் வென்றது யார் என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘தி ஈக்வலைஸர் 3’.

ஆக்‌ஷன் திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத ‘தி ஈக்வலைஸர் ‘பட வரிசையில் மூன்றாம் பாகமாக வெளியாகியுள்ளது ‘தி ஈக்வலைஸர் 3’. இதன் மூலம் ஹாலிவுட் புகழ்பெற்ற ஆன்டோய்ன் ஃப்குவா - டென்ஸெல் வாஷிங்டன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதற்கு முந்தைய ஈக்வலைஸர் படங்களின் தொடர்ச்சியே இப்படம் என்றாலும் அப்படங்களை பார்க்காதாவர்களும் இப்படத்துடன் ஒன்ற முடியும் அளவுக்கு திரைக்கதையை எழுதியிருக்கிறார் ரிச்சர்ட் வென்க். ’ஈக்வலைஸர்’ படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய அனைத்து அம்சங்களும் இதிலும் இடம்பெற்றுள்ளன.

முந்தைய படங்களைப் போலவே முழுப் படத்தையும் தாங்கிச் சுமப்பது டென்ஸெல் வாஷிங்டன் மட்டுமே. ஆக்‌ஷன் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியும், அல்டாமொண்டே ஊர் மக்களிடம் நட்பு பாராட்டும்போது இயல்பான நடிப்பை வழங்கியும் வசீகரிக்கிறார். டென்ஸெல் வாஷிங்டன் இல்லாமல் ‘ஈக்வலைஸர்' படங்கள் மூன்று பாகங்கள் வரை வந்திருக்குமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு ராபர்ட் மெக்கால் கதாபாத்திரத்துக்கு தன்னுடைய கரிஷ்மா மூலம் உயிரூட்டியுள்ளார்.

முந்தைய இரண்டு பாகங்களை ஒப்பிடுகையில் இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் குறைவு. முதல் பாதியில் நீண்ட வசனங்களால் நிரப்பப்பட்ட காட்சிகள் ஏராளம் உள்ளன. மாஃபியா கும்பல்களிடமிருந்து விலகிச் செல்லும் ஹீரோ கிட்டத்தட்ட இரண்டாம் பாதியில் தான் அவர்களை எதிர்த்து களத்தில் இறங்குகிறார். ஈக்வலைஸர் படங்களின் பரபர ஆக்‌ஷன் காட்சிகளை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த காட்சிகள் ஏமாற்றம் தரலாம். எனினும் இரண்டாம் பாதியில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் அந்த குறைகளை மறக்கடிக்கச் செய்கின்றன.

இன்னொருபுறம், முந்தைய பாகங்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இப்படத்தில் வன்முறை மிக அதிகம். வன்முறை காட்சிகளுக்கு உதாரணமாக சொல்லப்படும் ’சா’ (Saw) படங்களின் அளவுக்கு காட்சிகளில் ரத்தம் கொப்பளிக்கிறது. இந்திய சினிமா பாணியில் எதிரிகளை ஒன்பது நொடிகளில் அடித்து வீழ்த்துவது, அடிபட்ட நிலையில், ஆதரவாக உள்ள ஊர்மக்கள் முன்னே வருவது போன்ற ‘கூஸ்பம்ப்ஸ்’ காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.

நீண்ட வசனங்கள், லாஜிக் மீறல்கள் போன்ற குறைகள் இருந்தாலும் படத்தின் கிளைமாக்ஸ் முடியும்போது ஒரு முழுமையான ஆக்‌ஷன் படம் பார்த்த திருப்தியை ‘தி ஈக்வலைஸர் 3’ தருகிறது. இந்த படவரிசையில் இதுவே கடைசி பாகம் என்று படக்குழு அறிவித்திருப்பது ‘ஈக்வலைஸர்’ ரசிகர்களுக்கு சோகமான செய்தி. பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நல்ல ஒளி, ஒலி அமைப்பு கொண்ட பெரிய திரையில் சென்று பார்த்தால் இப்படம் ஒரு நல்ல ஆக்‌ஷன் விருந்தாக அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x