Published : 21 Nov 2017 04:07 PM
Last Updated : 21 Nov 2017 04:07 PM
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்பதால் டிசி பட வரிசை ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வார்னர் ப்ராஸ் தயாரிப்பில் டிசி காமிக்ஸின் சூப்பர்மேன், பேட்மேன், வொண்டர்வுமன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் பங்குபெறும் கதையே ஜஸ்டிஸ் லீக். மார்வலுக்கு எப்படி அவெஞ்சர்ஸோ அது போல டிசிக்கு ஜஸ்டிஸ் லீக் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், சூஸைட் ஸ்க்வாட், பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக மோசமான வரவேற்பையே பெற்றன. ஆனால் இந்த வருடம் வெளியான வொண்டர் வுமன் திரைப்படம் பல வசூல் சாதனைகளைப் படைத்தது.
அதனால் ஜஸ்டிஸ் லீக் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான மார்வல் சூப்பர்ஹீரோ படமான தோர்: ராக்னராக் வேறு முதல் 3 நாட்களில் 120ல்லியன் வசூலை தாண்டியதால், ஜஸ்டிஸ் லீக் கண்டிப்பாக குறைந்தது 100 மில்லியன் வசூலை முதல் வார இறுதியில் தாண்டும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு வரை நல்ல விமர்சனங்கள் வந்தாலும் கடைசி கட்டத்தில் மோசமான விமர்சனங்கள் சூழ, ராட்டன் டொமேடோஸ் என்ற பிரபல விமர்சன திரட்டு வலைதளத்தில் ஜஸ்டிஸ் லீகுக்கான மதிப்பெண் சரியத் தொடங்கியது. தற்போது இதுதான் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எதிரொலித்திருப்பதாக சில ஹாலிவுட் செய்தி வலைதளங்கள் குறிப்பிட்டுள்ளன.
இத்தனைக்கும் வியாழக்கிழமை திரையிடப்பட்ட ப்ரிவ்யூ காட்சிகள் மூலம் 13 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்திருந்தது. இது வொண்டர் வுமன் ப்ரிவ்யூ வசூலை விட 2 மில்லியன் டாலர்கள் அதிகமாகும். ஆனாலும் வார இறுதியின் முடிவில் 96 மில்லியன் டாலர்களை மட்டுமே ஜஸ்டிஸ் லீக் வசூலித்தது.
அமெரிக்கா நீங்கலாக, சர்வதேச அளவில் 185.5. மில்லியன் டாலர்களை ஜஸ்டிஸ் லீக் வசூலித்துள்ளது. இது அவெஞ்சர்ஸ் வசூலித்ததை விட .4 மில்லியன் டாலர்கள் அதிகமாகும்.
அதே நேரத்தில், தோர்:ராக்னராக், வெளியான மூன்றாவது வாரத்திலும், வசூலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. இதுவரை தோர் சர்வதேச அளவில் 738.1 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT