Last Updated : 18 Nov, 2017 03:26 PM

 

Published : 18 Nov 2017 03:26 PM
Last Updated : 18 Nov 2017 03:26 PM

சென்சார் சிக்கலில் முதல் பலி ஜஸ்டிஸ் லீக்: இந்திய மொழிகளில் வெளியாவதில் சிக்கல்

68 நாட்கள் சென்சார் விதியைபின்பற்றாததால் 'ஜஸ்டிஸ் லீக்' படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் சென்சார் நடைபெறாததால் படம் வெளியாகுமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

வார்னர் ப்ராஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியானது. ஆனால் படத்தின் ஆங்கிலப் பதிப்பு மட்டுமே வெளியானது. உரிய நேரத்தில் விண்ணப்பித்து தணிக்கை சான்றிதழ் பெற முடியாத காரணத்தால் படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புகள் வெளியாகவில்லை.

சமீபத்தில் மத்திய தணிக்கைத் துறை, பட வெளியீடு திட்டமிடப்பட்டிருந்தால் அந்த நாளிலிருந்து 68 நாட்களுக்கு முன்பே தணிக்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை அறிமுகம் செய்தது. தற்போது இதற்கு 'ஜஸ்டிஸ் லீக்' முதல் பலியாகியுள்ளது.

இது குறித்து வார்னர் ப்ராஸ் தரப்பில் கூறுகையில், "எப்படியோ ஆங்கில பதிப்புக்கு நாங்கள் உரிய நேரத்தில் தணிக்கை பெற்றுவிட்டோம். ஆனால் இந்தி, தமிழ், தெலுங்கு பதிப்புகள் இந்த 68 நாள் விதிக்கு பலியாகிவிட்டது. கடந்த வாரத்திலிருந்தே இந்த விதிமுறை அமலுக்கு வந்துவிட்டதால் எங்களால் மாநில மொழி பதிப்புகளுக்கு சான்றிதழ் பெற முடியவில்லை.

இந்த விதி அமலாவதற்கு முன்பாகவே ஆங்கில பதிப்பு தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டதால் இந்த ஒரு முறை எங்கள் படத்துக்கு இந்த விதியை தளர்த்த வேண்டும் என்று நாங்கள் கோரிகை வைத்தோம். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று இந்தி பதிப்பையாவது சென்சார் அதிகாரிகள் பார்ப்பார்கள் என நம்புகிறோம். அப்படி நடந்தால் இந்த வார இறுதியில் இந்தி பதிப்பை வெளியிடுவோம். ஆனால் தமிழ், தெலுங்கு பதிப்புகளுக்கு அதுவும் சாத்தியமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் பிரச்சினையால் இந்தியா முழுவதும் பட வெளியீடு தொடர்பாக பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. 'ஜஸ்டிஸ் லீக்' படத்தின் மாநில மொழி பதிப்புகளுக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சினை குறித்து பேசிய முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், "68 நாட்களுக்கு முன்பு எங்கள் படத்தை, அதுவும் முழுதாக முடிந்த, எடிட் செய்யப்பட்ட படத்தை தணிக்கைக்கு சமர்பிக்க வேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை. அபத்தமாகவும் உள்ளது.

பட வெளியீட்டின் கடைசி நாள் வரை இறுதி கட்ட வேலைகள் நடக்கும். பிறகு எப்படி அவ்வளவு முன் கூட்டியே தணிக்கைக்கு சமர்பிக்க முடியும்? அநேகமாக இந்த 68 நாட்கள் விதியால் வரும் வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சில படங்கள் வெளியாகாமல் போகலம். முன்னாள் துறை தலைவர் இருந்த பஹ்லஜ் நிஹலானியாவது நாங்கள் சொல்வதை புரிந்து கொண்டு உதவி செய்ய முயற்சிப்பார். ஆனால் ப்ரசூன் ஜோஷியை நெருங்கவே முடியவில்லை" என்றார்.

இது குறித்து கருத்து கூற ப்ரசூன் ஜோஷியை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் முன்னாள் தலைவர் பஹ்லஜ் நிஹலான் இது பற்றி கூறும்போது, "மூத்த மருமகள் சற்று நல்லவள் தான் போல என்று இளைய மருமகள் வரும்போது மாமியாருக்குத் தெரியுமாம். அப்படி இருக்கிறது இவர்கள் பேசுவது" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x