Published : 15 Jun 2023 05:01 PM
Last Updated : 15 Jun 2023 05:01 PM
‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்’ திரைப்படம் யுஏஇ, சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டு சோனி - மார்வெல் கூட்டு தயாரிப்பில் வெளியான அனிமேஷன் படம் ‘ஸ்பைடர் மேன் இன்டூ தி ஸ்பைடர்வெர்ஸ்’. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் படங்களில் வரும் மல்டிவெர்ஸ் கதைக்களம் இப்படத்தில்தான் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வாக்கிங் டாஸ் சான்டோஸ், ஜஸ்டின் கே.தாம்ப்சன், கெம்ப் பவர்ஸ் ஆகிய மூன்று இயக்குநர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர்.
இப்படம் யுஏஇ, சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வரும் ஜூன் 22-ஆம் தேதி வெளியாகவிருந்தது. இந்தச் சூழலில் திடீரென இப்படம் சினிமா புக்கிங் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்சார் வாரியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இப்படம் மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்’ படத்தில் ஒரு காட்சியில் LGBTQ கொடி காட்டப்படுவதே இந்தத் தடைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதற்கு தன்பாலின ஈர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல டிஸ்னியின் ‘லைட் இயர்’ அனிமேஷன் திரைப்படமும் இதே காரணத்துக்காக சவுதி உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT