Published : 30 May 2023 03:54 PM
Last Updated : 30 May 2023 03:54 PM

முதன்மைக் கதாபாத்திரங்களில் பெண்கள் நடித்தால் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கிட்டாதா? - ராணி முகர்ஜி கொந்தளிப்பு

“பெண்களை மையமாக கொண்டு உருவாக்கப்படும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுமா என்ற பேச்சு தொடர்ந்து வருகிறது. இது கவலையளிக்கிறது. அப்படியான கதாபாத்திரத்தில் நான் நடித்த ‘Mrs Chatterjee vs Norway’ பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பதிவு செய்தது” என ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ஒரு நடிகராக சினிமா மற்றும் கதாபாத்திரங்கள் மீதான உங்களின் பார்வை தொடர்ந்து பரிணமித்துக்கொண்டேயிருக்கும். என்னை பொறுத்தவரை நான் திரையில் பெண்களை சித்தரிக்கும் விதம் குறித்தும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்தும் நிலையான எண்ணங்களைக் கொண்டுள்ளேன். சமூகம் மற்றும் குடும்ப அமைப்புகளில் பெண்கள் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். ஒரு நடிகராக இதனை என் நாட்டிற்கும், உலகிற்கும் வெளிச்சமிட்டு காட்ட வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். படங்களில் பெண்களை தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் காட்ட வேண்டும் என விரும்புகிறேன்.

பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் அவர்களை கண்ணியமாகவும், அதிகாரமளிக்கும் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களை தேர்ந்தெடுப்பதை வழக்கமாக்கி கொண்டேன். என்னைப் பொறுத்தவரை, பெண்கள் மாற்றத்திற்கான முகவர்கள். அவர்கள் எப்போதும் தைரியமானவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும், அக்கறை செலுத்துபவர்களாகவும், கனவுகளை பின்தொடர்பவர்களாகவும், மல்டி டாஸ்கிங் செய்யகூடியவர்களாகவும் திகழ்கிறார்கள். என்னுடைய இந்த நம்பிக்கையை எதிரொலிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் பெண்களின் இந்த அம்சங்களை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்” என்றார்.

மேலும், “அண்மையில் நான் நடித்த ‘Mrs Chatterjee vs Norway’ பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றிருக்கிறது. காரணம், மக்கள் அழுத்தமான பெண் மைய கதாபாத்திரங்களை பெரிய திரையில் காண விரும்புகிறார்கள். பெண்களை மையமாக கொண்டு உருவாக்கப்படும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுமா என்ற பேச்சு தொடர்ந்து வருகிறது. இது எனக்கு கவலையளிக்கிறது. நிச்சயமாக பெண் மைய கதாபாத்திர படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும். ஒரு நல்ல படம் பார்வையாளர்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்கும். அதில் பாலினத்துக்கு எந்த பங்குமில்லை” என்று ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x