Published : 27 May 2023 12:37 PM
Last Updated : 27 May 2023 12:37 PM

பயோபிக்காக உருவாகிறது சவுரவ் கங்குலியின் வாழ்க்கை: விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணம் திரைப்படமாக உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. 1996ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர்.

2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்குள் மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரம் தலைதூக்கியபின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார். பேட்டிங்கில் ஆவேசத்தையும், களத்தில் ஆக்ரோஷத்தையும் இணைத்துச் செயலாற்றுவதுதான் கங்குலியின் பழக்கம். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.

கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக கங்குலி தெரிவித்திருந்தார். அது வெறும் அறிவிப்போடு மட்டுமே நின்றுவிட்டது. அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார். சமீபத்தில் கங்குலியை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் பேசியதாக தெரிகிறது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் நாயகனாக ரன்பீர் கபூர் நடிக்க கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை இந்தப் படம் கூறவிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x