Published : 28 Mar 2023 07:07 PM
Last Updated : 28 Mar 2023 07:07 PM
இந்தூர்: மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்வில் நடிகை டாப்ஸி அணிந்து வந்த ஆடை மற்றும் நகையும் இந்து கடவுளை மற்றும் இந்து மதத்தின் மீது நம்பிக்கையை கொண்டிருப்பவர்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும் இருப்பதாக சொல்லி வலதுசாரி அமைப்பு ஒன்று, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளது. இந்தப் புகார் நேற்று கொடுக்கப்பட்டுள்ளது.
ஹிந்த் ரக்ஷக் என்ற அந்த அமைப்பைச் சேர்ந்த ஏக்லவ்யா சிங் கவுர் என்பவர் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். அதில், லட்சுமி தேவியின் உருவம் கொண்ட நெக்லஸ் மற்றும் சர்ச்சையான ஆடையை டாப்ஸி அணிந்திருந்ததாக அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வாளர் கபில் சர்மா தெரிவித்துள்ளார்.
நடிகை டாப்ஸி, இப்போது இந்தி படங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர், கடந்த வாரம் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் அணிந்த ஆடையும், நகையும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் கவர்ச்சியான ஆடை அணிந்திருந்த டாப்ஸி, கழுத்தில் லட்சுமி உருவத்துடன் கூடிய நெக்லஸ் அணிந்திருந்தார்.
கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை இப்படி கவர்ச்சியான ஆடையுடன் அவர் எப்படி அணியலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இது தொடர்பாக இந்து அமைப்பினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த நிலையில், அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT