Last Updated : 17 Dec, 2016 12:59 PM

 

Published : 17 Dec 2016 12:59 PM
Last Updated : 17 Dec 2016 12:59 PM

தன்பாலின உறவு, பாலியல் வன்கொடுமை - உரத்துப் பேசிய பாலிவுட் 2016

கதையம்சம் இல்லாமல் வெறும் பொழுதுபோக்குக்காகவே பாலிவுட் திரைப்படங்கள் வெளிவருகின்றன என்று பொதுவாக விமர்சிக்கப்பட்டு வந்தநிலையில் ஓரினச்சேர்க்கை இடையேயான சிக்கல்கள், போதை மருந்து விவகாரம், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி 2016-ம் ஆண்டின் பாலிவுட் சினிமாக்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் முக்கியமான படங்கள் குறித்த ஒரு பார்வை இங்கே.

'அலிகர்'

'அலிகர்' திரைப்படம் சமகாலத்திய உண்மைக் கதை ஒன்றைத் தழுவி, தன்பாலின உறவுகளை சமூகம் எதிர்கொள்ளும் விதம் குறித்து எடுக்கப்பட்டிருந்தது.

உலகப்புகழ் பெற்ற மத்திய பல்கலைக்கழகத்தில் மராத்திய மொழி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் ஸ்ரீராமச்சந்திர ஸ்ரீநிவாஸ சிராஸ். இவர் ஒரு ரிக்‌ஷாக்காரருடன் தனது வீட்டினுள் அவ்வப்போது தன்பாலின உறவில் ஈடுபட்டு வந்தார். இந்த செய்தி ஊடகங்கள் மூலமாக வெளியானதை அடுத்து சிராஸ் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

அதனால் அவர் அடைந்த மன உளைச்சல்கள், அவரின் மர்ம மரணம் பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

'அலிகர்' திரைப்படம் அவரின் வாழ்க்கையை நுட்பமான கதை மொழியில் பேசியது. பாலிவுட்டின் பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய் தன்பாலின உறவு பேராசிரியராக நடித்திருந்தார்.

'கபுர் & சன்ஸ்'

ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து ஒரே மாதிரியான படங்கள் வெளிவந்த நிலையில், இயக்குநர் ஷகுன் பாத்ரா அவற்றின் வழக்கமான பாதையை உடைத்தெறிந்து 'கபுர் & சன்ஸ்' என்ற படத்தை எடுத்தார்.

'பிங்க்'

ஒரு பெண் முடியாது என்று சொன்னால் அதற்கு முடியாது என்றுதான் அர்த்தம் என்பதை இந்தியச் சமூகத்தின் மனசாட்சிக்குப் புரியும்படி சொல்லியது ‘பிங்க்’ திரைப்படம். அனிருதா ராய் சவுத்ரி இயக்கியிருக்கும் இந்தப் படம் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் சமகால இந்திய ஆணாதிக்கச் சிந்தனையைச் சம்மட்டியால் அடித்தது.

இரவில் வீட்டுக்கு வரும் நேரம், அணியும் ஆடை, சிரிப்பு, மது அருந்தும் பழக்கம், தனிப்பட்ட பாலியல் வாழ்க்கை போன்ற அம்சங்கள் இந்தச் சமகால சமூகத்தில் ஒரு பெண்ணை எப்படி நடத்தை கெட்டவளாக வரையறுக்கின்றன என்பதை வலியுடன் விளக்கியது ‘பிங்க்’திரைப்படம்.

'கஹானி 2'

'கஹானி 2' படத்தின் மூலம் இயக்குநர் சுஜாய் கோஷ், குழந்தைகளுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த வலிகளைப் பதிவு செய்தார்.

‘உட்தா பஞ்சாப்’

பஞ்சாப் மாநிலத்தின் தீவிர பிரச்சினையாகப் பேசப்படும் போதை மருந்துப் பழக்கத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘உட்தா பஞ்சாப்’. இயக்குநர் அபிஷேக் சவுபே இயக்கிய இந்தப் படத்தில் ஷாஹித் கபூர், கரீனா கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்கள் குறித்து முழுமையாக அலசியிருந்தது ‘உட்தா பஞ்சாப்’படம்.

'ஃபோபியா'

இயக்குநர் பவன் க்ருபாளினி, தன்னுடைய 'ஃபோபியா' படத்தின் மூலம் தாக்குதல்களால் மனதில் ஏற்படும் உளவியல் சிக்கல்களை த்ரில்லர் வகைமையில் பேசியிருந்தார்.

ஒரு நாள் இரவு டாக்ஸியில் தனியாக வீடு திரும்புகிறார் ராதிகா ஆப்தே. அப்போது வண்டி ஓட்டுநர் அவரிடம் தவறாக நடக்க முயல, அதிலிருந்து தப்பித்து வருகிறார். அதனால் அவரின் மனம் பாதிக்கப்பட்டு, புது இடம், புது மனிதர்கள், ஆட்கள் கூடும் இடம் என்று எதைக் கண்டாலும் பயப்படும் Agoraphobia ஏற்படுகிறது. அதனால் ராதிகா எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என்பதைத் திரை மொழியில் சொல்லியிருந்தார் இயக்குநர்.

‘டியர் ஜிந்தகி’

சுதந்திரமாக, தனித்தியங்க நினைக்கும் சமகால இளம்பெண்களின் மனப்போராட்டத்தை யதார்த்தமாகவும் எளிமையாகவும் பதிவுசெய்வதில் வெற்றியடைந்தது ‘டியர் ஜிந்தகி’ படம். கவுரி ஷிண்டே ‘இங்கிலிஷ் விங்லிஷ்’ படத்துக்கு அடுத்ததாக நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கிய திரைப்படம் இது.

சமூகத்தின் கற்பிதங்களை உடைத்தெறிய வேண்டிய அவசியத்தையும், வாழ்க்கையைக் காதலிக்க உடல் ஆரோக்கியத்தைப் போல மன ஆரோக்கியமும் அவசியம் என்பதையும் ‘டியர் ஜிந்தகி’ விளக்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x