Published : 18 Sep 2022 07:37 PM
Last Updated : 18 Sep 2022 07:37 PM
12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த பெண் ஒருவர் அமிதா பச்சன் நடத்தும் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.1 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
அமிதா பச்சன் வழிநடத்தும் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் 14-வது சீசன் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களை அளித்தால் இறுதியில் ரூ.1 கோடி பரிசை பெறலாம் என்பது தான் நிகழ்ச்சியின் விதி. பல சீசன்களாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி அண்மையில் மீண்டும் தொடங்கியது. இதில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக கவிதா சாவ்லா என்ற பெண் ரூ.1 கோடி பரிசுத் தொகையை வென்று சாதித்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் வசிப்பவர் கவிதா. குடும்பத் தலைவியாக இருந்து வரும் அவர் பிளஸ் 2 வரையே படித்து உள்ளார். அவரை படிக்க விடாமல் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் அவர் இந்த நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து ரூ.1 கோடியை வென்று சாதனை படைத்துள்ளார். குரோர்பதி நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரவு 9 மணிக்கு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இதனுடன் நிகழ்ச்சி முடியவில்லை. அடுத்த கேள்விக்கு கவிதா சரியாக பதில் கூறினால் அவர் ரூ.7.5 கோடி பரிசுத் தொகையை வெல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி குறித்து பேசியுள்ள கவிதா சாவ்லா, ''நான் 10-ம் வகுப்பு படித்து முடித்ததும் என் தந்தை மேற்கொண்டு என்னை படிக்க அனுமதிக்கவில்லை. திருமணம் செய்ய வேண்டும் எனக் குறிக்கோளுடன் இருந்தார். இதையடுத்து என்னுடைய ஆசிரியரின் வலியுறுத்தலால் தான் நான் 12-ம் வகுப்புவரை படிக்க முடிந்தது. நான் என் மகன் விவேக்கிற்கு வீட்டில் பாடங்களை சொல்லிக்கொடுப்பேன். அப்போது நான் இந்த நிகழ்ச்சிக்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால கனவு. என் வீட்டு வேலைகளை முடித்த பின் கிடைக்கும் நேரங்களில் நான் பொது அறிவு தொடர்பாக நிறைய படிப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT