Published : 12 Sep 2022 09:05 AM
Last Updated : 12 Sep 2022 09:05 AM
மும்பையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் வசிக்கும் சிவா (ரன்பீர் கபூர்), பணக்காரப் பெண் இஷாவை (ஆலியா பட்) காதலிக்கிறார். சக்திவாய்ந்த பிரம்மாஸ்திரத்தை காலம் காலமாகப் பாதுகாத்து வரும் பிரம்மான்ஷ் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி மோகன்பார்கவ் (ஷாருக் கான்) எதிரிகளால் கொல்லப்படுகிறார்.
அவரிடமிருந்து பிரம்மாஸ்திரத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் அவர்கள், இன்னொரு பகுதிக்காக, ஓவியர் அனீஷையும் (நாகார்ஜுனா) மூன்றாவது பகுதியை வைத்திருக்கும் குருதேவரையும் (அமிதாப் பச்சன்) தேடிச்செல்கின்றனர்.
இதை தனது அபூர்வசக்தி மூலம் தெரிந்துகொள்ளும் சிவா,அனீஷைக் காப்பாற்றச் செல்கிறார். அவரால் முடிந்ததா? பிரம்மாஸ்திரத்துக்கு என்ன ஆகிறது? சிவா யார்? அவனுக்கும்பிரம்மாஸ்திரத்துக்கும் என்ன தொடர்பு?ஆகிய கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீதிப் படம்.
5 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட ‘பிரம்மாஸ்திரா’ ட்ரயாலஜியின் முதல்பாகம் இது. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படம் ஃபேன்டசி படங்களை விரும்புபவர்களுக்கான விருந்து.
இதுவரை வந்த இந்திய சினிமாவில் விஷுவல் எஃபெக்ட்ஸை அதிகமாகவும் சிறப்பாகவும் பயன்படுத்திய படம் இதுதான். திரைவெளியைச் சுற்றிச் சூழும் தீ, நெருப்பிலான பிரம்மாண்ட மனித உருவம் எழுந்து நிற்பது, திரை முழுவதும் பரவும் ஒளி, துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டா பார்வையாளரை நோக்கிவருவது என இந்தக் காட்சிகளை முப்பரிமாணத்தில் ((3 டி)பார்ப்பது சிறந்த காட்சி அனுபவமாக அமைந்துள்ளது.
ஆனால் இதற்குச் செலுத்திய மெனக்கெடலைக் கொஞ்சம் கதைக்கும் அளித்திருக்கலாம். படத்தின் ஆதாரமாக அமையும் சிவா-இஷா காதல் காட்சிகளில் புதுமையும் சுவாரசியமும் இல்லை. ரன்பீர்- ஆலியா கெமிஸ்ட்ரியின் காரணமாகவே அதைப் பார்க்க முடிகிறது.
இடைவேளை நெருக்கத்தில் நிகழும் சேஸ் காட்சிகள் சூடுபிடித்தாலும் கதாபாத்திரங்களின் பின்னணிகள் போதுமான அளவு விளக்கப்படாததால் ஒன்ற முடியவில்லை. அமிதாப் பச்சன் மூலம் தன் பிறப்பையும் பெற்றோரையும் பற்றி நாயகன் தெரிந்துகொள்ளும் கதை, 2, 3-ம் பாகங்களுக்கான முன்களமாக அமைந்துள்ளது. பிரம்மான்ஷ் குழுவுக்கும் எதிர்க்குழுவுக்கும் இடையே நடக்கும் நீண்டயுத்தமும் காட்சி அனுபவமாக ஈர்க்கிறதே தவிர, உள்ளடக்கரீதியாகப் பார்வையாளரைக் கட்டிப்போடவில்லை.
ரன்பீர் கபூர், தன் இயல்பான நடிப்பால் ஃபேன்டஸி பிரம்மாண்டத்தைத் தாண்டிஒரு மனிதத்தன்மையை வழங்கியிருக்கிறார். ஆலியா தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார். ஷாருக் கான், நாகார்ஜுனா இருவரும் ரசிக்க வைக்கிறார்கள். அமிதாப் பச்சன்வழக்கம்போல் முதுமையின் கண்ணியத்தை உணர்த்துகிறார்.
சண்டைக் காட்சிகளில் அவரைப் பார்க்கும்போது வயதே ஆகவில்லை என்று தோன்றுகிறது. பிரீதம் இசையில் பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன. ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத்தொகுப்பு ஆகிய தொழில்நுட்ப அம்சங்கள் உயர்தரத்தில் அமைந்துள்ளன. கதையில் கோட்டைவிட்டாலும் உயர்தரமான காட்சி அனுபவத்தைத் தருவதில் இலக்கை எட்டியிருக்கிறது இந்த பிரம்மாஸ்திரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT