Published : 28 Aug 2022 06:00 PM
Last Updated : 28 Aug 2022 06:00 PM
''நடிகைகள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது. முடி, அலங்காரம், உடைகள், நகங்கள் என நிறைய விஷயங்கள் உள்ளன'' என்று பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுபவம் குறித்து பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்திதா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நவாசுதீன் சித்திக் நடிக்கும் பாலிவுட் படம் 'ஹட்டி' (Haddi). இப்படத்தை அக்ஷத் அக்சத் அஜய் சர்மா இயக்குகிறார். பழிவாங்கும் கதையை மையமாக கொண்ட இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் 'நவாசுதீன் சித்திக்கா இது' என வாயடைத்துள்ளனர். காரணம் சாம்பல் நிற கவுன் ஒன்றை அணிந்துகொண்டு அடையாளம் காண முடியாத மேக்கப்புடன் அரியணை ஒன்றில் பெண் வேடமிட்டு ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார் நவாசுதீன் சித்திக். அவரது இந்தப் புதிய தோற்றம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் தனது பெண் வேடமிட்ட கதாபாத்திரம் குறித்து அவர் பேசுகையில், ''பெண் வேடமிட்டிருந்த என்னைப் பார்த்து என் மகள் மிகவும் வருத்தப்பட்டாள். அது ஒரு பாத்திரத்திற்காக என்று அவளுக்கு இப்போது தெரிந்த பிறகு சமாதானம் ஆகிவிட்டாள். இந்த அனுபவத்திற்குப் பிறகு, இதை தினசரி அடிப்படையில் செய்யும் நடிகைகள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது. முடி, அலங்காரம், உடைகள், நகங்கள் என நிறைய விஷயங்கள் உள்ளன. ஒரு நடிகை தனது வேனிட்டி வேனில் இருந்து வெளிவருவதற்கு ஏன் ஒரு ஆணுக்கு இணையானதை விட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பது இப்போது புரிகிறது. அவர்களின் செயல் முற்றிலும் நியாயமானது. நான் இப்போது இன்னும் பொறுமையாக அவர்களுக்காக காத்திருப்பேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT