Published : 04 Jul 2022 01:05 PM
Last Updated : 04 Jul 2022 01:05 PM
விக்ரம் வேதா படத்தின் படப்பிடிப்பை உத்தரப்பிரதேசத்தில் நடத்த வேண்டாம் எனவும், அபுதாபியில் நடத்த வேண்டும் என்றும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கூறியதாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றது. இந்தியிலும் 'விக்ரம் வேதா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.
புஷ்கர் - காயத்ரி இயக்கி வரும் இந்தப் படத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள். அபுதாபி, லக்னோ, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் உத்தரப்பிரதேசத்தில் விக்ரம் வேதா படப்பிடிப்பை நடத்தக் கூடாது எனக் கூறி நிராகரித்ததாகவும், துபாயில் படப்பிடிப்பை நடத்துமாறு கோரியதாகவும் பல வதந்திகள் பரவின. ஹ்ரித்திக் ரோஷனின் இந்த வலியுறுத்தலால் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்து படக்குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ''விக்ரம் வேதா படத்தின் படப்பிடிப்பு தளங்கள் தொடர்பான தவறான தகவல்கள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகின்றன. விக்ரம் வேதா படத்தின் படப்பிடிப்பு லக்னோ உள்பட இந்தியாவைச் சுற்றியே பரவலாக நடக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி விடுகின்றோம். கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை படத்தின் ஒருபகுதி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. ஏனெனில் அங்கு மட்டும்தான் `பயோ பபுள்’ எனப்படும் மிக அதிக ஆட்களை வைத்து பணி செய்யும் சூழலும், உள்ளுக்குள்ளேயே படப்பிடிப்புக்கு ஏற்ப ஸ்டுடியோவில் செட் கட்டிக்கொள்வது போன்ற வசதிகளும் இருந்தன.இந்த உண்மையை திசை திருப்ப பரப்பப்படும் அனைத்து செய்திகளுமே பொய்யானது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT