Published : 30 Jun 2022 06:22 AM
Last Updated : 30 Jun 2022 06:22 AM
மும்பை: ‘அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ்’ சுருக்கமாக ‘தி அகாடமி’ என அழைக்கப்படுகிறது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.
புதிய உறுப்பினர்கள் தொடர்பாக இந்த அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சினிமாத்துறைக்கு சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் புதிய உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
சினிமாத் துறையில் உள்ள திறமை அடிப்படையில் அகாடமி உறுப்பினர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர். இந்தாண்டு அகாடமி உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் 44 சதவீதம் பேர் பெண்கள், 50 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள 53 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும், 37 சதவீதம் பேர் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அகாடமியின் நடிகர்கள் பிரிவில் உறுப்பினராக இருக்க நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கஜோல் நடித்த ‘மை நேம் இஸ் கான்’ மற்றும் ‘கபி குஷி கபி காம்’ ஆகியவை சமீபத்தில் மிகவும் பிரபலம் அடைந்தன. அதேபோல் சூர்யா நடித்த ஜெய் பிம் மற்றும் சூரரை போற்று போன்ற படங்களும் பேசப்பட்டன.
இந்தாண்டு அகாடமி விருதுகளில் சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘ரைட்டிங் வித் ஃபயர்’ இயக்குனர்கள் சுஷ்மித்கோஷ், ரிண்டு தாமஸ் ஆகியோரும் அகாடமி உறுப்பினர்களாக சேர அழைக்கப்பட்டுள்ளனர்.
காக்டிக்கு அழைப்பு
அகாடமியின் எழுத்தாளர்கள் பிரிவில் உறுப்பினர்களாக சேர இந்தி திரைப்படங்கள் தலாஸ், குல்லி பாய் மற்றும் கோலி ஆகியவற்றின் திரைக்கதை வசனம் எழுதிய காக்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அகாடமியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், நடிகர்கள் ஆமீர் கான், சல்மான் கான், அலி அப்ஷல், நடிகை வித்யா பாலன், தயாரிப்பாளர்கள் ஆதித்யா சோப்ரா உட்பட இந்திய சினிமாத் துறையைச் சேர்ந்த பலர் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளனர்.
அகாடமி உறுப்பினர்கள் ஓட்டுக்கள் அடிப்படையில் ஆஸ்கர் விருதுக்கான படங்கள், கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அகாடமியின் விருது நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்கு பெறுவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT