Published : 15 May 2022 12:15 AM
Last Updated : 15 May 2022 12:15 AM
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், கேன்ஸ் திரைப்பட விழாவில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா இந்தாண்டு மே 17-ம் தேதி தொடங்க இருக்கிறது. அந்த விழாவில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் குழு ஒன்று பங்கேற்க உள்ளது. இதில், பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் க்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், பாலிவுட் நடிகர் நவாஸூதீன் சித்திக், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தியக் குழுவிற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதேபோல மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் திரையிடப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், தற்போது இந்த விழாவில் பங்கேற்பதில் நடிகர் அக்ஷய் குமாருக்கு சிக்கல் நேர்ந்துள்ளது. அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள அக்ஷய் குமார், "கேன்ஸ் திரைப்பட விழாவில் உள்ள இந்திய பெவிலியனில் நமது சினிமா கால்பதிப்பதை உண்மையிலேயே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், விழாவில் பங்கேற்கும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். கேன்ஸ் விழாவில் பங்கேற்பதை நிறைய மிஸ் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
அக்ஷய்க்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது இது இரண்டாவது முறை. கடந்த ஆண்டு ஏப்ரலில் முதல்முறை அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT