Published : 28 Apr 2022 01:22 AM
Last Updated : 28 Apr 2022 01:22 AM
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும், கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கும் இடையேயான ட்விட்டர் விவாதம் பேசுபொருளாகி உள்ளது.
'விக்ரம் ராணா' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிச்சா சுதீப், "இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள். ஆனாலும் வெற்றி காண்பதில் அவர்கள் தோல்வி அடைகிறார்கள்" என்று பேசியிருந்தார்.
எதிர்பாராத விதமாக கிச்சா சுதீப்பின் இந்த கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்வினை ஆற்றத் தொடங்கினார். "சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்" என்று இந்தியில் பதிவிட்டார் அஜய் தேவ்கன்.
சில மணித்துளிகளில் அவருக்கு கிச்சா சுதீப் கொடுத்த பதில் வரவேற்பை பெற்று வருகிறது. அவர் தனது பதிவில், "நான் பேசியதம் பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறன் சார். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படிச் சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படி சொல்லவில்லை" என்றவர்,
தனது அடுத்த பதிவில், "நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. என்னுடைய இந்தப் பதிலை ஒருவேளை நான் கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?" என்று பதிலடி கொடுத்தார்.
இருவரின் திடீர் விவாதம், ட்விட்டர் களத்தை சூடாக்கியுள்ளது. தேசிய மொழி தொடர்பான விவாதங்கள் இருவரின் ட்வீட்டுக்கு பிறகு அதிகமாக தொடங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT