Published : 05 Apr 2022 03:56 PM
Last Updated : 05 Apr 2022 03:56 PM
'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிவிங்கிள் கன்னா, 'நெயில் ஃபைல்ஸ்' என்ற பெயரில் பேரழிவு தரும் நகங்களைப் பற்றி திரைப்படம் எடுக்க இருப்பதாகக் கிண்டலாகக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் மார்ச் 11ம் தேதி விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் வெளியானது. 1990களில் காஷ்மீரில் பண்டிட்டுகளின் வெளியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. படம் வெளியானது முதல் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. படம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். பல்வேறு மாநிலங்கள் படத்திற்கு வரி விலக்கு அளித்தும், படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறையையும் அறிவித்தன. இந்நிலையில் முன்னாள் பாலிவுட் நடிகை டிவிங்கிள் கன்னா படம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'அந்தேரி ஃபைல்ஸ்', 'சவுத் பாம்பே ஃபைல்ஸ்' மற்றும் பிற திரைப்படங்களை பதிவு செய்ய மற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் அவசரம் காட்டுவதாக கிண்டல் செய்திருக்கிறார். மேலும், பேரழிவுகளைத்தரும் நகங்கள் குறித்து நெயில் ஃபைல்ஸ் (Nail Files) என்ற படத்தை இயக்க உள்ளதாகவும் காமெடியாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர், ''ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தி காஷ்மீர் பைல்ஸுக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதிய திரைப்படத் தலைப்புகள் பதிவு செய்யப்படுவதாக எனக்குத் தெரிவிக்கப்படுகிறது. பெரிய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்கெனவே உரிமை கோரப்பட்டதால், தற்போது சிறிய நகரங்களான அந்தேரி ஃபைல்ஸ், கர்-தண்டா ஃபைல்ஸ் மற்றும் சவுத் பாம்பே ஃபைல்ஸ் போன்ற பெயர்களைப் பதிவு செய்யப்படுகின்றன. எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது, எப்படி எனது சகாக்கள் அவர்களை படைப்பாளர்களாக கருதுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்
மேலும் அவர் தனது தாயார் டிம்பிள் கபாடியாவிடம் பேரழிவைத்தரும் நகங்கள் குறித்து நெயில் ஃபைல்ஸ் (Nail Files) படத்தை இயக்க உள்ளத தனது யோசனையை தெரிவித்ததாகவும் ''வகுப்புவாத சவப்பெட்டியில் இறுதி ஆணியை அடிப்பதைவிட இந்த முயற்சி சிறந்தது'' என்றும் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT