Published : 01 Apr 2022 05:09 PM
Last Updated : 01 Apr 2022 05:09 PM

'நான் இந்தி நடிகர்... மாநில மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன்' - பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்

'எந்த மாநில மொழிப் படங்களிலும் உறுதுணை நடிகராக நடிக்க மாட்டேன்' என பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மொழி படங்களின் தாக்கம் சமீப காலங்களில் பாலிவுட் களத்தில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இதற்கு மிகச் சமீப உதாரணங்களாக ’புஷ்பா’ மற்றும் ’ஆர்ஆர்ஆர்’ படங்களைச் சொல்லலாம். இந்த தாக்கம் காரணமாக சில பாலிவுட் ஸ்டார்கள் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். சல்மான் கான், சிரஞ்சீவியின் தெலுங்கு படமான `காட்ஃபாதர்' படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து இயக்கவுள்ள படத்திலும் ஒரு பாலிவுட் ஹீரோ நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ’விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார்.

இந்த வரிசையில், பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஜான் ஆபிரகாம் நடிப்பில் 'அட்டாக்' படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், பிரபாஸின் ’சலார்’ படத்தில் தான் அவர் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்தத் தகவலை ஜானிடம் செய்தியாளர்கள் கேள்வியாக எழுப்பினர்.

அதற்கு பதில் கொடுத்த அவர், "நான் எந்த மாநில மொழிப் படங்களிலும் நடிக்கவில்லை. இந்த வதந்தி எப்படி தொடங்கியது என்பதும் தெரியவில்லை. மேலும், எந்த மாநில மொழிப் படங்களிலும் உறுதுணை நடிகராக நடிக்க மாட்டேன். மற்றவர்களை போல பிசினஸிற்காக தெலுங்கு படமோ அல்லது வேறு எந்த மாநில மொழிப் படங்களிலோ நடிக்க விரும்பவில்லை. ஏனென்றால், நான் இந்திப் பட நடிகர்" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கூடுதல் தகவல்: ஜான் ஆபிரகாம் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் என்றாலும், அவரின் பூர்விகம் இந்தி பின்னணி கொண்டது அல்ல. அவரின் தந்தை கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும், அவரின் தாய் இரான் நாட்டைப் பூர்விகமாக கொண்டவர் ஆவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x