Published : 14 Mar 2022 03:53 PM
Last Updated : 14 Mar 2022 03:53 PM
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' (இந்தி) படத்திற்கு, பல்வேறு மாநில அரசுகளிடம் வரிவிலக்கு கேட்டு பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் வெள்ளிக்கிழமை வெளியாகியது. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தை கூறும் இப்படத்திற்கு வரி விலக்கு வேண்டி பாஜகவினரால் பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏக்கள், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல், ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்களும் அம்மாநில காங்கிரஸ் அரசிடம் வரிவிலக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை தொடர்ச்சியாக அதிக காட்சிகள் திரையிடுமாறு ஐநாக்ஸ் நிர்வாகத்திடம் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் படம், காஷ்மீர் இந்துகளின் வலியை காட்டுகிறது என்று கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கோவா, ஹரியாணா மாநில பாஜக முதல்வர்கள் பாராட்டியுள்ளனர்.
வரிவிலக்கு: இதனிடையே, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்கு பாஜக ஆளும் ஹரியாணா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசும் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கங்கனா ஆவேசம்: இந்தப் படம் குறித்து கங்கனா கூறும்போது, " 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் பற்றி திரையுலகில் நிலவும் அமைதியை கவனியுங்கள். இதன் கதை மட்டுமல்ல, வியாபாரமும் முன்மாதிரியாக இருக்கிறது. இந்த வருடத்தில் மிகவும் வெற்றிகரமான, லாபகரமான படமாக இது இருக்கும். பல கட்டுக்கதைகளையும் முன் முடிவுகளையும் உடைத்து, இந்தப் படம் ரசிகர்களை திரையரங்குகளுக்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் காலை 6 மணி காட்சிகள் கூட நிரம்பி வழிகிறது. இது நம்ப முடியாதது' என்றார்.
மேலும், திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள இந்தப் படத்தின் வசூல் விவரங்களை டேக் செய்திருக்கும் நடிகை கங்கனா, 'மலிவான விளம்பரம் இல்லை. போலி எண்ணிக்கை இல்லை, தேசவிரோத திட்டம் ஏதுமில்லை. நாடு மாறும்போது திரைப்படங்களும் மாறும், ஜெய்ஹிந்த்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து சந்தித்தார். அப்போது படம் குறித்து பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார். சந்திப்புக்கு பின் பேசிய இயக்குநர் விவேக், "மோடி ஜியின், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும்தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT