Published : 03 Feb 2016 06:21 PM
Last Updated : 03 Feb 2016 06:21 PM
நாயகிகளை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிட்டு, பெரிய நாயகர்கள் உறுதுணை கதாபாத்திரங்களில் நடிக்க முன் வரவேண்டும் என பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி வலியுறுத்தியுள்ளார்.
பாலிவுட்டில் பல அழுத்தமான, அதேநேரத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களிலும் நடித்தவர் ஷபானா ஆஸ்மி. செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:
"பெண்களை மையப்படுத்தி நிறைய படங்கள் உருவாக வேண்டுமென்றால், அதற்கு அதிக பட்ஜெட் தேவையான நிலையில், பெரிய நாயகர்கள், நாயகிகளுக்கு அடுத்தபடியான கதாபாத்திரத்தில் நடிக்க முன்வர வேண்டும்.
பல நாயகிகள், தனிப்பட்ட முறையில் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், நாயகர்கள் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் போது, அவர்களுக்கு அடுத்தபடியான பாத்திரத்தில் நடிக்க தயங்குவதில்லை. அதை ஏன் நாயகர்களும் செயல்படுத்தக் கூடாது. அது ஆரோக்கியமான சூழலுக்கு வழிவகுக்கும் என நினைக்கிறேன்."
பாலிவுட் நாயகிகளும், நாயகர்களின் சம்பளமும்
"இன்றைய பாலிவுட் நாயகிகள் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர். வித்யா பாலன், தீபிகா, பிரியங்கா, கங்கனா போன்றவர்களைப் பாருங்கள். வழக்கத்துக்கு மாறான பாத்திரத்தில் நடிக்கின்றனர். கதாபாத்திரத்துக்கு தேவையான உழைப்பைத் தர தயாராக இருக்கின்றனர். இது அற்புதமாக இருக்கிறது.
பெரிய ஹீரோக்கள் இல்லாத படங்களில், பட்ஜெட் காரணங்களுக்காக, நாயகிகள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ளும் நிலை உள்ளது. அதை செய்ய அவர்கள் தயங்குவதில்லை. இது நல்ல விஷயம்.
நாயகர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குறிவைப்பது அவர்களுக்கு அழுத்தமாக மாறிவிடும். ரூ.100 கோடி வசூல் என்பது பட்ஜெட்டை பொருத்துதான். ஒரு நடிகர் அதிகபட்ச சம்பளத்தை வாங்கும்போது, அதற்கேற்ற வருமானமும் வரும் என்பது உறுதியளிக்க வேண்டும்.
கடந்த காலத்தில் ராஜ் கபூர் போன்ற இயக்குநர்கள், தங்களது ஒரு படம் தோல்வியடையும்போது, அடுத்த படத்துக்கான சம்பளத்தை குறைத்துக் கொண்டனர். அப்போதுதான் நமது தொழிலும், துறையும் பாதுகாக்கப்படும் என்பது அவருக்கு தெரியும்.
நாயகர்கள் தான் அதிக வசூலைக் கொண்டு வருகின்றனர். எனவே அவர்களுக்கு அதிக சம்பளம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான், அவ்வபோது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் பெரிய நாயகர்கள் நடித்து அந்தப் படங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறுகிறேன்."
இவ்வாறு ஷபானா ஆஸ்மி பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT