Published : 24 Aug 2021 12:14 PM
Last Updated : 24 Aug 2021 12:14 PM
அமிதாப் பச்சனின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பெங்களூரு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு யுபி சிட்டி பகுதியில் கடந்த ஞாயிறு அன்று போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில் சரியான ஆவணங்கள், காப்பீடு இல்லாத ஏழு சொகுசு வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் இருந்த ஒரு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் விசாரித்ததில் அந்த காரின் உரிமையாளர் பெயர் பாபு என்பதும், 2019ஆம் ஆண்டு அமிதாப் பச்சனிடமிருந்து அந்த காரை வாங்கிய அவர் பெயரை மாற்றம் செய்யாததும் தெரியவந்தது.
இதுகுறித்து பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''2019ஆம் ஆண்டு ரூ.6 கோடிக்கு அமிதாப் பச்சனிடமிருந்து நேரடியாக இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை நான் வாங்கினேன். அது பழைய கார்தான் என்றாலும் அது அமிதாப்புக்குச் சொந்தமானது என்பதாலேயே அதை வாங்கினேன். அப்போதே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பத்திருந்தேன். ஆனால், தவிர்க்க இயலாத சில காரணங்களால் எப்படியோ அது முடியாமல் போய்விட்டது.
எங்களிடம் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன. இன்னொரு கார் புதியது. ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் என்னுடைய பிள்ளைகள் அமிதாப் பச்சனிடமிருந்து வாங்கிய காரை வெளியே எடுத்துச் செல்வார்கள். கடந்த ஞாயிறு அன்று என் மகள்தான் அந்த காரை ஓட்டிச் சென்றார். தற்போது தேவையான ஆவணங்களை ஒப்படைத்து காரை மீட்டுச் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்''.
இவ்வாறு பாபு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT