Published : 28 Jul 2021 12:27 PM
Last Updated : 28 Jul 2021 12:27 PM
வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவரென்றால் பதக்கம் வென்றால் மட்டுமே நீங்கள் இந்தியராக முடியும் என்று நடிகர் மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மகளிருக்கான 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நாடு முழுவதும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உட்படப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகரான மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே அவர்கள் இந்தியர்களாகப் பார்க்கப்படுகிறார்கள் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''நீங்கள் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவரென்றால், நாட்டுக்காகப் பதக்கம் வென்றால் மட்டுமே நீங்கள் இந்தியராக முடியும். இல்லையென்றால் நம்மை ‘சிங்கி’, ‘சைனீஸ்’, ‘நேபாளி’ என்றும் சமீபத்திய பெயரான ‘கரோனா’ என்றும் அழைப்பார்கள். இந்தியா சாதி வெறியில் மட்டும் மூழ்கியிருக்கவில்லை. மாறாக இனவெறியிலும் மூழ்கியுள்ளது. என்னுடைய அனுபவத்திலிருந்து இதைக் கூறுகிறேன்''.
இவ்வாறு அங்கிதா குறிப்பிட்டுள்ளார்.
அங்கிதாவின் கருத்துக்குப் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT