Published : 16 Jun 2021 12:04 PM
Last Updated : 16 Jun 2021 12:04 PM

இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை: ‘லகான்’ இயக்குநர் பெருமிதம்

‘லகான்’ திரைப்படம் குறித்த அனுபவங்களை இயக்குநர் அஷுடோஷ் கோவாரிகர் பகிர்ந்துள்ளார்.

ஆமிர் கான் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான படம் ‘லகான்: ஒன்ஸ் அபான் எ டைம் இன் இந்தியா’. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. அஷுடோஷ் கோவாரிகர் இயக்கிய இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

நேற்றுடன் ‘லகான்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பலரும் அதுகுறித்த ஹேஷ்டேகுகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் ‘லகான்’ இயக்குநர் அஷுடோஷ் கோவாரிகர் இப்படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

''கமர்ஷியல் வெற்றிக்காக மட்டுமே ஒரு படத்தை அதற்கேற்றபடி திட்டமிட்டு உருவாக்க இயலும். ஒரு கதையை உருவாக்கி அதற்கான விஷயங்களைச் சேர்த்தால் ஒரு குறிப்பிட்ட வெற்றிக்கு உத்தரவாதம் கிடைக்கும். ஆனால், ஒரு படம் உலகளாவிய படமாக மாற உங்களால திட்டமிட இயலாது. ஒரு இயக்குநர் ஒரு கதையை எழுதி அதன் மூலம் தான் விரும்பும் விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால், அதன் பிறகு அந்தப் படம்தான் உலகளாவிய ஒன்றாக மாறவேண்டும். அதை முன்கூட்டியே திட்டமிட முடியாது. அது நம் ஆன்மாவிலிருந்து வரவேண்டும்.

‘லகான்’ திரைப்படம் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது மிகப்பெரிய அனுபவம். இந்தியாவிலிருந்து இப்படத்தை நாங்கள் அனுப்பியது குறித்து மட்டுமே யோசித்தோமே தவிர மற்ற 75 நாடுகளிலிருந்து என்ன மாதிரியான படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் என்று நான் யோசிக்கவில்லை. இரண்டாவதாக சில படங்கள் சர்வதேச சினிமா தளத்தில் மிகவும் பிரபலமானவையாக இருந்தன. ஒரு படம் அந்த வரையறைக்குள் வரவில்லை என்றால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது.

படம் வெளியானபோது பாக்ஸ் ஆபீஸ் வெற்றி குறித்த பயம் எனக்கு இருக்கவில்லை. கதையை எழுதி முடித்தபோது இது வித்தியாசமான படமாக இருக்கும் என்றும், நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் பார்வையாளர்களை மகிழ்விக்கும் படமாக இருக்கும் என்றும் நினைத்தேன். ஆனால், படம் இத்தகைய வெற்றியைப் பெறும் என்று படப்பிடிப்பின்போது நாங்கள் நினைக்கவில்லை''.

இவ்வாறு இயக்குநர் அஷுடோஷ் கோவாரிகர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x