Published : 04 Jun 2021 11:50 AM
Last Updated : 04 Jun 2021 11:50 AM
மறைந்த நடிகர் சுஷாந்த் பெயரில் சமூக வலைதளங்களில் சிலர் சட்டவிரோதமாக நிதி திரட்டப்படுவதாக அவரது சகோதரி மீட்டு சிங் குற்றம் சாட்டியுள்ளார்
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலாலும்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாலிவுட் பிரபலங்களுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பலரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே சென்று அவர்களை நேரடியாகச் சாடி வந்தனர். இதனால் பல்வேறு பிரபலங்கள் சமூக வலைதளங்களை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது.
தற்போது வரை சமூக வலைதளங்களில் சுஷாந்த் தற்கொலை குறித்து விரைவான விசாரணை வேண்டும் என்று அவரது ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்த் பெயரில் சமூக வலைதளங்களில் சிலர் சட்டவிரோதமாக நிதி திரட்டுவதாகவும், இதற்கு தங்கள் குடும்பத்திலிருந்து யாரும் எந்த அனுமதியும் தரவில்லை என்றும் சுஷாந்தின் சகோதரி மீட்டு சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''துரதிர்ஷ்டவசமாக, இந்த கரோனா சூழலில் சிலர் சுஷாந்த் மரணத்தைத் தங்களுடைய சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தி வருவது எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நிச்சயமாக மனிதத் தன்மையற்ற செயல். அவ்வாறு செய்பவர்கள் அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
சுஷாந்த் பெயரில் நன்கொடை அல்லது நிதியைத் திரட்டுவதற்கு எங்கள் குடும்பம் யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதையும், சுஷாந்த் தொடர்பான எதையும் செய்ய யாருக்கும் நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் அனைவரது கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறோம். அது ஒரு திரைப்படமோ, புத்தகமோ எதுவாக இருப்பினும் சரியே''.
இவ்வாறு மீட்டு சிங் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT